Header

Sri Lanka Army

Defender of the Nation

15th November 2022 15:45:14 Hours

கிளிநொச்சிப் படையினரால் முன்னாள் எல்டீடீஈ பெண் போராளிக்கு புதிய வீடு நிர்மாணிப்பு

எல்டீடீஈ முன்னாள் பெண் போராளி மற்றும் அவரது மகளுக்கு கிளிநொச்சி செல்வநகரில் இராணுவ மனிதாபிமான சிந்தனை காரணமாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மற்றும் அவரது நண்பர்களின் உதவியுடன் புதிய வீடொன்று நிர்மாணிக்கப்பட்டது.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் 57 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ் அவர்கள் இத் திட்டத்தினை மேற்பார்வையிட்டார். லெப்டினன் கேணல் எஸ்எஸ்ஏ நாராயணகே தலைமையில் 7 வது இலங்கை இலேசாயுத காலட் படையணி படையினரின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மிகவும் அர்ப்பணிப்புள்ள மனிதவலுவினை பயன்படுத்தி வீட்டை நிர்மாணித்தனர். குடும்பத்தின் வாழ்க்கை நிலைமையினை கருத்தில் கொண்டு இராணுவத்தினரால் இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

642 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த கம்லத் அவர்களின் ஒருங்கிணைப்பில் அமெரிக்காவில் வாழும் மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் (ஓய்வு) மற்றும் அவரது நண்பர்கள் மூலம் 1.7 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கியதன் மூலம் செல்வநகரைச் சேர்ந்த முன்னாள் போராளி திருமதி எஸ்.சரஸ்வதி அவர்களுக்கு இப் புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.

வியாழக்கிழமை (10) இந்து முறைப்படி நடைபெற்ற வைபவத்தில், புதிய வீடு பயனாளிக்கு சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டதுடன் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்த பின் குடும்பத்திற்கான சாவிகள் கையளிக்கப்பட்டன.

இந் நிகழ்வில் 57 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ், 571, 572 வது மற்றும் 573 வது காலாட் பிரிகேட் தளபதிகள், 7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.