Header

Sri Lanka Army

Defender of the Nation

09th April 2021 13:04:40 Hours

இராணுவ குடும்பத்திற்கான மேலுமொரு வீட்டுத் தொகுதி அமைக்கும் பணி கெந்தலந்தவில் நிறைவு

பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவத்தின் வருடாந்த புத்தாண்டு நிகழ்வில் கலந்துகொள்ள முன்பாக, இராணுவ அதிகாரிகளுக்கான வீட்டுத் தொகுதி வசதிகளை மேம்படுத்தும் முகமாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட மற்றுமொரு மாடி வீட்டுத் தொகுதியினை கடந்த (09) வௌ்ளிக்கிழமை திறந்துவைத்தார்.

குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டதோடு மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வசந்த ஆப்ரூ உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் மத சடங்குகளுடன் நிகழ்வு ஆரம்பமானது.

அதனையடுத்து இவ்விழாவில் தெரிவு செய்யப்பட்ட படையினரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இராணுவ தளபதியால் வீட்டுச் சாவிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு, பெயர் பலகைகளை திறந்து வைத்ததுடன் ரிப்பன்களை வெட்டி வீட்டினை திறந்து வைத்தார்.

மேலும் பயனாளிகளான இராணுவ வீரர்களின் குடும்பத்தாருடன் சுமூகமாக எண்ணங்களை பகிர்ந்துகொள்ள தளபதி நேரம் ஒதுக்கிக்கொண்டமையும் சிறப்பம்சமாகும்.

இராணுவ தளபதியின் அறிவுரைக்கமைய இராணுவத்திற்குள் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அவசியமான அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமையால் இராணுவ அதிகாரிகளின் குடும்பங்கள் நெருக்கடி இன்றி வாழ வழியேற்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் உபகரண பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு, வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் இந்திராஜித் கந்தனாராச்சி, காணி மற்றும் விடுதிகள் பணிப்பாளர் பிரிகேடியர் பிரியந்த சில்வா, பொறியியல் சேவைப்பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் சாந்த குமார மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.