இலங்கையின் 77வது சுதந்திர தினம் பிரமாண்டமான தேசிய விழாவுடன் கொண்டாடப்பட்டது

இலங்கையின் 77 வது தேசிய சுதந்திர தினம் 04 பெப்ரவரி 2025 அன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் “தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டது. அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வானது கௌரவ பிரதமர், சர்வமத தலைவர்கள், இராஜதந்திரிகள், அமைச்சர்கள், இராணுவ அதிகாரிகள், சிவில் உயரதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

அன்றைய நிகழ்ச்சியின் ஆரம்பத்தை அடையாளம் காட்டும் வகையில் அதிமேதகு ஜனாதிபதி வருகை தந்தார். பிரதமர், பாராளுமன்ற சபாநாயகர், பிரதம நீதியரசர், முப்படை தளபதிகள் மற்றும் பல முக்கிய விருந்தினர்கள் பிரதம அதிதி அந்த இடத்திற்கு வருவதற்கு முன்னர் நிகழ்வை அலங்கரித்தனர். பிரதமரால் ஜனாதிபதி அன்புடன் வரவேற்கப்பட்டார்.

அதன் பின்னர், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளுடன், பதில் பொலிஸ் மா அதிபர் இணைந்து, அன்றைய பிரதம அதிதியான அதிமேதகு ஜனாதிபதியை பிரதான கொடிக்கம்பத்திற்கு அழைத்துச் சென்றதுடன் பாடசாலை மாணவ, மாணவியர்கள் தேசிய கீதத்தை இசைத்தலுடன் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அனைத்து தேசபக்தி இதயங்களையும், பழமையான, ஒப்பிடமுடியாத மற்றும் மாறுபட்ட கலாசார நெறிமுறைகளால் வண்ணமயமாக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, விசேட மேடையில் இருந்த ஜனாதிபதி அவர்களுக்கு, பாடசாலை மாணவியர் குழுவினால் வழங்கப்பட்ட ‘ஜயமங்கள காத்தா’ மற்றும் ‘தேவோ வஸ்ஸது காலேன’ பாராயணம் மூலம் ஆசிர்வாதம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசத்தின் ஒருமைப்பாட்டைக் காக்கும் உன்னத நோக்கத்திற்காக உயிர்நீத்த அனைத்து தேசபக்தர்கள் மற்றும் போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அன்றைய நிகழ்ச்சி நிரலின் அடுத்த கட்டமாக வர்ணமயமான முப்படைகளின் பாதுகாப்பு அணிவகுப்பு முப்படைகளின் சேனாதிபதியான கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. மரியாதை அணிவகுப்பைத் தொடர்ந்து, ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியதுடன் நாட்டின் முன்னேற்றம் மற்றும் அதன் முன்னோக்கிய பயணத்தில் ஒற்றுமையின் முக்கியத்துவம் குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

சிறிது நேரத்தின் பின்னர், முப்படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், பொலிஸ், பொலிஸ் விஷேட படையணி, சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள், தேசிய மாணவ சிப்பாய் படையணி உறுப்பினர்கள் மற்றும் அங்கவீனமுற்ற போர்வீரர்கள் அடங்கிய அணிவகுப்பு மரியாதை இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதியும் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில், இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய வழங்கப்பட்டது. இலங்கையின் இராணுவ ஒழுக்கத்தையும் தேசிய பெருமையையும் வெளிப்படுத்திய அணிவகுப்பில், பங்கேற்பாளர்கள் இராணுவ மரபுகளுக்கு இணங்க ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தினர்.

அன்றைய கொண்டாட்டங்களின் இறுதிப் பகுதியில் கலாசார குழுக்களின் துடிப்பான நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் இலங்கை கலாசாரத்தின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் பாரம்பரிய நடனங்கள் இடம்பெற்றன. இந்நிகழ்வு, நாட்டின் பல்லின சமூகத்தின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் குறிக்கும் வகையில், அனைத்து இனத்தைச் சேர்ந்த பிள்ளைகள் தமிழில் தேசிய கீதத்தை பாடியதுடன் அன்றைய தின நிகழ்வு இனிதே நிறைவுற்றது.