20th May 2026
அதிமேதகு ஜனாதிபதியும், ஆயுதப்படைகளின் சேனாதிபதியுமான கௌரவ அனுர குமார திசாநாயக்க அவர்கள் 2026 மே 19 ஆம் திகதி பத்தரமுல்லை தேசிய போர்வீரர் நினைவுத் தூபியில் நடைபெற்ற 17வது தேசிய போர்வீரர் தின நினைவு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வின் போது, 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் புலிகளின் பயங்கரவாத்திற்கு எதிரான போரின் போது உயிரைத் தியாகம் செய்த முப்படை மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த போர் வீரர்களின் வீரம், துணிச்சல், தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் விலைமதிப்பற்ற தியாகங்களை அங்கீகரிக்கும் வகையில், மலர் வலயம் வைத்து அவர்களின் நினைவுகள் ஆழ்ந்த மரியாதையுடன் போற்றப்பட்டன.
மதகுருமார்கள், வீரமரணமடைந்த போர் வீரர்களின் அன்புக்குரிய துணைவியர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்களும் போர் வீரர்களும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலங்கை விமானப்படை மார்ஷல் ரொஷான் குனதிலக்க, பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு), பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சுனில் வடகல, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொந்தா (ஓய்வு), இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க, பதில் பொலிஸ் மா அதிபர் ஜெனரல் திரு. பிரியந்த வீரசூரிய, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், முன்னாள் முப்படைகளின் தளபதிகள், ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர், முப்படைகளின் சிரேஷ்ட வீரர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் அந்த வீரர்களின் நினைவுக்கு அஞ்சலி செலுத்த ஒன்றுகூடியிருந்தனர்.
ரணவிரு சேவா அதிகாரசபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த புனித நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, சமய அனுசரிப்புகள் இடம்பெற்றன. ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர், ஓய்வுபெற்ற பிரிகேடியர் செனரத் கொஹேன ஆற்றிய வரவேற்புரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து, வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் கூட்டத்தில் உரையாற்றியதுடன் அதனைத் தொடர்ந்து அஞ்சலி செலுத்துதல், 'ரணபெர' இருதி வாசிப்பு மற்றும் வீரத்திற்கான பாராட்டுரை வாசித்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
பிரதம விருந்தினர், ஏனைய முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து, அந்த நினைவிடத்திற்கு மலர் வலயம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, வீரமரணமடைந்த போர் வீரர்களின் உறவினர்கள் பிரதிநிதிகள் கூட்டத்துடன், அழைக்கப்பட்டிருந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களும் இணைந்து அந்த நினைவிடத்திற்கு மலர் வலயம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இது அன்றைய நினைவு நிகழ்வின் உச்சக்கட்டமாக அமைந்தது.
மாலையில், இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய லாஸ்ட் போஸ்ட் மற்றும் ரீவில்லி ஒலித்தலுடன் சம்பிரதாய நிகழ்வுகள் நிறைவடைந்தன.