4th March 2026
இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2026 பெப்ரவரி 15,18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் இலங்கை பொறியியல் படையணியின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு தொடர்ச்சியான உத்தியோகப்பூர்வ விஜயங்களை மேற்கொண்டார்.
இந்த விஜயம் 7 வது களப் பொறியியல் படையணி மற்றும் கந்தளாய் பொறியியல் படையணி ஆகியவற்றுடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து இராணுவ பதவி நிலைப் பிரதானி களப் பொறியியல் பிரிகேட் சென்று, பின்னர் 8, 9, 10 மற்றும் 11வது களப் பொறியியல் படையணிகளுக்கு விஜயம் மேற்கொண்டார். ஒவ்வொரு விஜயத்தின் போதும் அவருக்கு சம்பிரதாய வாகன தொடரணி மரியாதை வழங்கப்பட்டது.
அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றிய அவர், சப்பர்ஸ் படையினரின் வளர்ந்து வரும் பொறுப்புகளை வலியுறுத்தி, தொழிநுட்ப சிறப்பம்சம், ஒழுக்கமான தலைமைத்துவம், ஒற்றுமை மற்றும் நேர்மை ஆகியவை வெற்றிக்கு அவசியமானவை என்பதை எடுத்துரைத்தார். எதிர்கால செயற்பாட்டு பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் நம்பகமான மற்றும் திறமையான படையணியை உருவாக்க தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாடு, முன்மாதிரியான நடத்தை மற்றும் தனிப்பட்ட மீள்தன்மை ஆகியவற்றை அவர் ஊக்குவித்தார்.
பின்னர் அவர் சமீபத்திய தித்வா சூறாவளியின் போது சப்பர்ஸ் வழங்கிய முன்மாதிரியான சேவையைப் பாராட்டினார். ஒவ்வொரு நிறுவனத்திலும், அவர் குழுப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டதுடன், அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.
இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.