ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும், பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்கள், 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2026 ஜனவரி 13 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 1990 செப்டெம்பர் 07 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி பாடநெறி 01 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் 1992 டிசம்பர் 21 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் பொறியியல் சேவைகள் படையணியில் நியமிக்கப்பட்டார்.

தனது இராணுவ பணிக்காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2023 ஆகஸ்ட் 19 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2026 ஜனவரி 19 ஆம் திகதி 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவ நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறும் போது, அவர் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மற்றும் பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதி ஆகிய பதவிகளை வகித்தார்.

தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையில், சிரேஷ்ட அதிகாரி பல முக்கிய கட்டளை, பணிநிலை மற்றும் பயிற்றுனர் நியமனங்களை வகித்துள்ளார். இதில் 5 வது கள பொறியியல் படையணியின் படைத் தளபதி, 5 வது மற்றும் 8 வது கள பொறியியல் படையணியி நிறைவேற்று அதிகாரி, 8 வது கள பொறியியல் படையணியின் புலனாய்வு அதிகாரி, பொறியியல் பிரிகேட் தலைமையகத்தின் பணிநிலை அதிகாரி 3, மறைந்த மேஜர் ஜெனரல் கே.ஜே.சி. பெரேரா (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ் ஆர்டிசீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் உதவியாளர், 8 வது கள பொறியியல் படையணியின் 81 வது கள குழுவின் அதிகாரி கட்டளை, இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்தின் பணியாளர் அதிகாரி 3 (நிர்வாகம்) மற்றும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பொதுப் பணிநிலை அதிகாரி 2 (செயற்பாடுகள்/பயிற்சி) ஆகியவை அடங்கும்.

மேலும் அவர் 511 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தின் பிரிகேட் மேஜர், இராணுவத் தலைமையக பதவி நிலைப் பிரதானி அலுவலகத்தில் பணிநிலை அதிகாரி 1, இராணுவ செயலாளர் அலுவலகத்தில் பணிநிலை அதிகாரி 1 (விசாரணைப் பிரிவு) மற்றும் 6 வது கள பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

மேலும், சிரேஷ்ட அதிகாரி ஹைட்டி ஐ.நா அமைதி காக்கும் படை குழுவின் யூ9 பிரதித் தளபதி மற்றும் யூ9 தளபதி ஆகிய பதிகளை வெளிநாடுகளிலும், 5 வது கள பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி, இராணுவத் தலைமையக நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் கேணல் (பொது பணிநிலை), இராணுவத் தலைமையக பயிற்சி பணிப்பகத்தின் கேணல் பயிற்சி (வெளிநாட்டு), இராணுவத் தளபதியின் இராணுவ உதவியாளர், 213 வது காலாட் பிரிகேட் தளபதி, மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்தின் பணிப்பாளர், உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர், வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர், ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம், பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதி, 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, இராணுவத் தலைமையக பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மற்றும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

சிரேஷ்ட அதிகாரி, தந்திரோபாய குழு தளபதி பாடநெறி, அதிகாரிகளின் சிறப்புப் பயிற்சி பாடநெறி, படையணி கணக்கு அதிகாரிகள் பாடநெறி, படையணி நிர்வாக பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலையாளர் பாடநெறி மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி உள்ளிட்ட பல தொழிற்துரை இராணுவ பாடநெறிகளை பயின்றுள்ளார்.

இளம் அதிகாரிகள் பாடநெறி (இந்தியா), பொறியியல் அதிகாரிகளின் போர் பொறியியல் பயிற்றுனர்கள் பாடநெறி (இந்தியா), இராணுவ கட்டளை மற்றும் பணிநிலையாளர் பாடநெறி (சீனா) மற்றும் சுரங்க மற்றும் வெடிக்கும் பொறியியல் கட்டளை பாடநெறி (சீனா) உள்ளிட்ட பல வெளிநாட்டு இராணுவ பாடநெறிகளையும் பயின்றுள்ளார்.

இராணுவத் தகுதிகளுக்கு மேலதிகமாக, சிரேஷ்ட அதிகாரி ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் முதுகலைப் பட்டத்தையும், சீனாவின் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பொறியியலாளர் கல்வியற் கல்லூரியில் சுரங்கம் மற்றும் வெடிப்பு பொறியியல் கட்டளை டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.