9th January 2026
இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி, அவரது துணைவியார் திருமதி சுனிதா திவேதி அவர்களுடன் இணைந்து 2026 ஜனவரி 06 ஆம் திகதி தொடங்கிய இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக் கொண்டார். இந்த விஜயம், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாக காணப்பட்டது.
இந்த விஜயத்தின் போது ஜெனரல் திவேதி, இலங்கையின் சிரேஷ்ட இராணுவ மற்றும் அரச அதிகாரிகளுடன் உயர் மட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டார். பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்துதல், தொழில்முறை இராணுவக் கல்வி மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல் ஆகியவற்றில் இந்த கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தியது.
அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, இந்திய இராணுவ பிரதானி இலங்கை இராணுவத்தின் பல அமைப்புகளையும் இராணுவ நிறுவனங்களையும் பார்வையிட்டார். இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையேயான நீண்டகால நட்பு மற்றும் பரஸ்பர மரியாதையை பிரதிபலிக்கும் வகையில், இலங்கை இராணுவத்தின் நலனுக்காக அவர் நன்கொடை வழங்கியுள்ளார்.
இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள், வருகைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜெனரல் திவேதி மற்றும் திருமதி சுனிதா திவேதி ஆகியோருக்கு நினைவுப் பரிசில்களை வழங்கினார். இச்செயலை வருகை தந்த குழுவினர் அன்புடன் ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் இராணுவத் தலைமையகத்தின் பணிப்பாளர்கள், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அழைக்கப்பட்ட ஏனைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.