8th January 2026
இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி அவர்கள், தனது துணைவியார் திருமதி சுனிதா திவேதி அவர்களுடன் இணைந்து, 2026 ஜனவரி 08 அன்று இராணுவப் போர் கல்லூரிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார். இவ்விஜயம் இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு மற்றும் தொழில்முறை இராணுவ பயிற்சியை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
வருகை தந்த இந்திய இராணுவ பிரதானியை இராணுவப் போர் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.ஆர்.என்.சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் அன்புடன் வரவேற்றார். அதைத் தொடர்ந்த வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், இராணுவப் போர் கல்லூரியின் தளபதி, மற்றும் வருகை தந்த இந்திய இராணுவ பிரதானி ஆகியோர் பரஸ்பர தொழில்முறை ஆர்வம் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பாக சுமுகமான கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர். பின்னர் நினைவுப் பரிசில்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டதுடன் நிகழ்வுகள் நிறைடைந்தன.
நிகழ்ச்சியின் போது, இந்தியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டமான இராணுவ போர் கல்லூரியில் அமைக்கப்படவுள்ள இந்து–லங்கா விளையாட்டு வளாகத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார். ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் பிரதிபலிக்கும் வகையில், மத ஆசீர்வாதங்களுடன் இந்நிகழ்வு நடைபெற்றது. அடிக்கல் நாட்டும் நிகழ்வை தொடர்ந்து, இந்திய இராணுவ பிரதானி நினைவு பதாகையை திறந்து வைத்து வளாகத்தில் ஒரு மரக்கன்று நாட்டினார்.
விழாவில் பங்கேற்ற அனைத்து மதத் தலைவர்களுக்கும் ஜெனரல் உபேந்திர திவேதி பரிசுகள் மற்றும் அட்டபிரிகர வழங்கினார். பின்னர், நிறுவனத்தில் உடற்பயிற்சி மற்றும் நலன்புரி வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடம் குறித்த விரிவான விளக்கத்தில் பங்கேற்றார்.
நல்லெண்ணம் மற்றும் தொடர்ச்சியான ஆதரவின் அடையாளமாக, இந்திய இராணுவ பிரதானி திறன் மேம்பாடு மற்றும் மனிதாபிமான ஆதரவிற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், இராணுவப் போர் கல்லூரிக்கு ஒரு ஆம்புலன்ஸ் வண்டியினையும் வழங்கினார்.
அதன் பின்னர், ஜெனரல் திவேதி அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புகளை பதிவிட்டதை தொடர்ந்து, குழு படம் எடுத்துகொண்டார். அதற்கமைய சிரேஷ்ட அதிகாரி இராணுவப் போர் கல்லூரியின் மாணவ அதிகாரிகளுடன் உரையாடினார்.
இந்த விஜயம் முழுவதும் இராணுவப் போர் கல்லூரியின் சிரேஷ்ட அதிகாரிகள், கல்விசார் ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.