சீரற்ற வானிலை நிவாரணப் பணிகளுக்கு உதவ இந்திய இராணுவ மருத்துவக் குழு இலங்கை வருகை

இந்திய இராணுவ பரா கள வைத்திய குழுவை சேர்ந்த 73 மருத்துவப் பணியாளர்கள், முழுமையாகச் செயற்படும் கள மருத்துவமனையுடன் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 2025 டிசம்பர் 02 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தனர்.

வெள்ளம் மற்றும் தொடர்புடைய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சிகிச்சை, அவசர சிகிச்சை மற்றும் ஏனைய மனிதாபிமான உதவிகளை வழங்கும் பொருட்டு மஹியங்கனை பிரதேசத்தில் நிலை நிறுத்தப்படுவர். இந்த முக்கியமான காலகட்டத்தில் அவர்களின் கள மருத்துவமனை இப்பகுதியில் மருத்துவ தேவையினை கணிசமாக மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மந்தீப் சிங் நேகி ஆகியோர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த குழுவினரை அன்புடன் வரவேற்றனர்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கும் இடையிலான பிராந்திய கூட்டாண்மையில் இந்திய இராணுவ மருத்துவப் படையின் நிலைநிறுத்தம் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது.