9th November 2025
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இரண்டு பெரிய சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக ஹெராயின் மற்றும் வல்லப்பட்டை (கைரினோப்ஸ் வல்ல) கைப்பற்றப்பட்டதுடன், சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் தென் மாகாணத்தில் 2025 நவம்பர் 6 மற்றும் 8 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்டன.
2025 நவம்பர் 08 ஆம் திகதி இராணுவ வட்டாரங்கள் வழங்கிய புலனாய்வு தகவலின் அடிப்படையில் கொழும்பு குற்ற தடுப்பு பிரிவின் அதிகாரிகள், கொடகம, மிட்டியாகொட பிரதேசத்தில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் விளைவாக, ரூ. 75 மில்லியன் பெறுமதியான 5 கிலோகிராம் 420 கிராம் ஹெராயினை வைத்திருந்த ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக கூறப்படும் ரூ. 10,811,500.00 பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
காலி மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினால் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில், மாத்தறை, கொட்டபல பிரதேசத்தில் 2025 நவம்பர் 06 ஆம் திகதி மற்றொரு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. தெனியாய வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் ரூ. 662 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான 110 கிலோ 450 கிராம் வல்லப்பட்டையுடன் கைது செய்யப்பட்டனர்.