7th November 2025
இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளுக்கும் இடையிலான கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாயப் பயிற்சி “வீரத்தின் பாதை 2025”, மதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் 2025 நவம்பர் 04, அன்று வெற்றிகரமாக நிறைவடைந்ததுடன் இது இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் கூட்டு களப் பயிற்சி ஆகும்.
நிறைவு விழாவில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பயங்கரவாத எதிர்ப்பு திறன்களை மேம்படுத்துதல் மற்றும் தந்திரோபாய பயிற்சிகள், கள காட்சிகள் மற்றும் உருவகப்படுத்துதல்கள் மூலம் இயங்குதன்மையை வளர்ப்பது இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
இறுதி தந்திரோபாய செயல்விளக்கத்தினை தொடர்ந்து சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றதுடன் இதில் இரு நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களும் அவர்களின் செயல்திறனுக்காகப் பாராட்டப்பட்டனர். நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன.
ரஷ்ய கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி போரிசோவிச் கோஸ்லோவ், இலங்கைப் படையினரின் தொழில்முறைத் திறனைப் பாராட்டி இருதரப்பு இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தப் பயிற்சியின் பங்கை பாராட்டினார்.
இந் நிகழ்வில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, முதன்மை பதவி நிலை அதிகாரிகள், பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.