26th October 2025
ரஷ்ய-இலங்கை இருதரப்பு இராணுவப் பயிற்சியான " வீரத்தின் பாதை 2025" 2025 ஒக்டோபர் 25 முதல் நவம்பர் 04 வரை மதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் நடைபெறவுள்ளது. இந்த தந்திரோபாய பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி, இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளுக்கும் இடையிலான முதல் கூட்டு களப் பயிற்சியாகும்.
2025 ஒக்டோபர் 24 ஆம் திகதி மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த படையினரை காலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுடன் 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.என்.கே.டி. பண்டார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.யூ.ஏ. சோலங்கராச்சி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஆகியோர் இணைந்து வரவேற்றனர்.
ரஷ்ய கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஆண்ட்ரி போரிசோவிச் கோஸ்லோவ் அவர்கள் பயிற்சியின் தலைவராக வருகை தந்ததுடன், கூட்டுப் பயிற்சித் திட்டம் முழுவதும் ரஷ்ய படைப்பிரிவை வழிநடாத்துவார்.
"வீரத்தின் பாதை 2025" பயிற்சியானது, இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தவும், தொழில்முறை பிணைப்புகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையே கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு திறன்களை வளர்க்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்ச்சியான களப் பயிற்சிகள், தந்திரோபாய உருவகப்படுத்துதல்கள் மற்றும் இயங்குதன்மை பயிற்சிகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.