இலங்கை இராணுவத்தினால் நாடு முழுவதும் காயமடைந்த போர்வீரர்களுக்கான மருத்துவ முகாம்

இராணுவ தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னாள் படைவீரர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம், ரணவிரு சேவா அதிகாரசபையுடன் இணைந்து, 2025 செப்டம்பர் 19 ஆம் திகதி அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் தொடர்ச்சியான மருத்துவத் திட்டங்களின் ஒரு பகுதியாக, காயமடைந்த ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை நடாத்தியது. கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் இராணுவ வீரர்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். வருகை தந்த இராணுவத் தளபதியை, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுடன் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.டப்ளியூ ஜயவீர யூஎஸ்பீ பீஎஸ்சீ மற்றும் முன்னாள் படைவீரர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் டப்ளியூ.ஏ.எஸ்.ஆர் விஜேதாச டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றனர்.

இந்த நிகழ்வின் போது, இராணுவத் தளபதி மற்றும் ஏனைய சிறப்பு விருந்தினர்களால் இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 20 சக்கர நாற்காலிகள், 69 ஊன்றுகோல்கள், ஒரு வாக்கர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாளமாக வழங்கப்பட்டன.

இந்த திட்டம் 1,250 க்கும் மேற்பட்ட தனிநபர்களுக்கு பயனளித்ததுடன், இதில் ஊனமுற்ற ஓய்வுபெற்ற/ மருத்துவ சபை உடனாக ஓய்வு பெற்றவர்கள் மற்றும் தற்போது மருத்துவ பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அடங்குவர். இந்த மருத்துவ முகாமில் மருத்துவ ஆலோசனைகள், செயற்கை உறுப்பு பராமரிப்பு, தோல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், மனநல ஆலோசனை மற்றும் ஊட்டச்சத்து வழிகாட்டுதல் ஆகியவை இடம்பெற்றன.

இராணுவ தலைமையக பணிப்பக பணிப்பாளர்கள், பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், ரணவிரு சேவா அதிகாரசபை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்பாளர்களின் தற்போதைய பிரச்சினைகள் குறித்து விசாரிக்க இந் நிகழ்வில் பங்கேற்றார்.