30th July 2025
இலங்கை இராணுவம், தூய இலங்கை பணிக்குழுவுடன் இணைந்து, 2025 ஜூலை 29 ஆம் திகதி "இராணுவத்துடன் சுத்தமான சுற்றுச்சூழல் - தேசத்திற்கு சுத்தமான கடற்கரை" என்ற கருப்பொருளின் கீழ் நாடு முழுவதும் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை தொடங்கியது. மட்டக்குளி, காக்கைதீவு கடற்கரைப் பிரதேசத்தில் நடைபெற்ற இத்திட்டத்தின் தொடக்க விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த முயற்சிக்கு சகோதர சேவைகள், சுற்றாடல் அமைச்சு, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், தொண்டு மற்றும் சிவில் அமைப்புகள், சுற்றுச்சூழல் குழுக்கள் மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆதரவு வழங்கினர்.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்புரவுத் திட்டம், ஐந்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்களின் ஒருங்கிணைப்புடன், நாட்டின் கடலோரப் பகுதியில் நடாத்தப்பட்டது. யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர், வெல்லம்குளம் முதல் சுண்டிகுளம் வரையிலான கடற்கரைப் பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர், மரிட்டுக்கோட்டை முதல் வெல்லம்குளம் வரையிலும், சுண்டிக்குளம் முதல் கொக்கிளாய் வரையிலும் உள்ள பகுதிகளுக்குப் பொறுப்பேற்றனர். கொக்கிளாய் முதல் குமண வரையிலான பகுதியை கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினரும், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர், குமண முதல் குடவெல்ல வரையிலான பகுதியை சுத்தம் செய்தனர். மேலும், குடவெல்ல முதல் மரிட்டுக்கோட்டை வரையிலான பகுதியை சுத்தம் செய்யும் பணியில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் ஈடுபட்டனர்.