6th July 2025
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நிகவெரட்டிய மணிகம பகுதியில் சுற்றித் திரிந்த பாத்தியா என்ற காட்டு யானை, சமீபத்தில் நீர் குழியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) அவர்களினால் யானையின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அதனடிப்படையில், வனவிலங்கு அதிகாரிகள் வரும் வரை, 15 வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் அப்பகுதியின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர். இதன் போது கடுமையான வெப்பம் காரணமாக யானையின் துயரத்தை உணர்ந்த இராணுவ வீரர்கள், அதன் உடலின் மீது தண்ணீரை ஊற்றி குளிப்பாட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். மேலும், கடுமையான வெயிலில் இருந்து யானையின் பாதுகாப்பிற்காக கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டது.
மேலும், யானையின் தலையைத் தாங்கவும், அது தண்ணீரில் மேலும் நழுவுவதைத் தடுக்கவும் ஒரு மணல் மேடு உருவாக்கப்பட்டது. தற்போது, அந்த இடத்தில் இருக்கும் வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து இராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.