புதிய கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி கடமைகளைப் பொறுப்பேற்பு

கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 2025 ஜூன் 25 கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்கள் மற்றும் மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் புதிய தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

புதிய தளபதியை அன்புடன் வரவேற்று, கஜபா படைப்பிரிவின் படையினரால் இராணுவ மரபுகளுக்கு ஏற்ப பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் மரியாதை அணிவகுப்பு என்பன வழங்கப்பட்டன.

இராணுவ மரியாதைகளுக்குப் பிறகு தளபதி மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை ஏற்றுக்கொண்டதுடன் தனது புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் வகையில் ஒரு உத்தியோகப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், சிரேஷ்ட அதிகாரி குழு படம் எடுத்துக்கொண்டதுடன் ஒரு மரக்கன்றை நாட்டினார்.

பின்னர், தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன் கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக தளபதிகள் உட்பட அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு நன்றி தெரிவித்தார். படையினரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலமும், அந்தந்தப் பாத்திரங்களில் ஒழுக்கம் மற்றும் தொழில்முறை திறன்களைப் பேணுவதன் மூலமும் படையினருக்கு வசதியான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள நான்கு மாவட்டங்களில் பரவியுள்ள மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கான உன்னதமான பொறுப்பை அவர் மேலும் எடுத்துரைத்தார். இயற்கை பேரழிவுகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் தளபதி அடிக்கோடிட்டுக் காட்டியதுடன் மேலும் பிராந்தியத்திற்கான பொதுவான இலக்குகளை அடைவதற்கு படையினரை பணியாற்ற ஊக்குவித்தார். அவர் தனது தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொண்டதுடன் கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான நோக்கங்களை கோடிட்டுக் காட்டினார்.

இந்நிகழ்வில் 22, 23 மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவுகளின் படைத்தளபதிகள், கிழக்கு வழங்கல் கட்டளைத் தளபதி, பிரிகேட் தளபதிகள், கிழக்க பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.