29th January 2025
இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, மேஜர் ஜெனரல் பி.ஐ அஸ்ஸலராட்சி யூஎஸ்பீ பீஎஸ்சி பீடீஎஸ்சீ அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 ஜனவரி 28 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இச்சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பணிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். இதன்போது அவரது குடும்பத்தினர் அவருக்கு பணிக்காலம் முழுவதும் ஆற்றிய முக்கிய பங்கையும் இராணுவத் தளபதி பாராட்டினார்.
பதிலுக்கு, மேஜர் ஜெனரல் பி.ஐ அஸ்ஸலராட்சி யூஎஸ்பீ பீஎஸ்சி பீடீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதி வழங்கிய உறுதியான வழிகாட்டல் மற்றும் ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். சந்திப்பின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக விசேட பாராட்டுச் சின்னமும், அவரது குடும்பத்தினருக்குப் பரிசுகளும் வழங்கினார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:
மேஜர் ஜெனரல் பி.ஐ அஸ்ஸலராட்சி யூஎஸ்பீ பீஎஸ்சி பீடீஎஸ்சீ அவர்கள் 1990 நவம்பர் 20 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரி பாடநெறி எண் 08 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். ரத்மலானை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரி மற்றும் தியதலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூயில் தனது இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் 1992 நவம்பர் 14 ஆம் திகதி இலங்கை சமிக்ஞை படையணியில் இரண்டாம் லெப்டினன் நிலையில் நியமிக்கப்பட்டார்.
இராணுவத்தில் தனது சேவையின் போது அடுத்தடுத்த நிலைகளுக்கு சீராக உயர்த்தப்பட்ட அவர் 2024 பெப்ரவரி 16 அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்த்தப்பட்டார். இந்த சிரேஷ்ட அதிகாரி 2025 பெப்ரவரி 04 அன்று தனது 55 வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். ஓய்வு பெறுவதற்கு முன்னர் அவர் தற்போது பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் பணிப்பாளர் நாயகமாக பதவி வகிக்கின்றார்.
4 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் குழு கட்டளையாளர், 4 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் சி நிறுவன கட்டளை அதிகாரி, மன்னார் உள்ளக பாதுகாப்புப் பிரிவின் கட்டளை அதிகாரி, சமிக்ஞை பயிற்சி பாடசாலையின் பயிற்சி அதிகாரி, 51 வது காலாட் படைப்பிரிவின் சமிக்ஞை அதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிலிளவல் அதிகாரிகள் பிரிவின் பயிற்சி அதிகாரி, 54 வது காலாட் படைப்பிரிவின் சமிக்ஞை அதிகாரி மற்றும் 4 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் தகவல் தொடர்புப் பிரிவின் கட்டளை அதிகாரி போன்ற நியமனங்களை தனது பணிக்காலத்தில் வகித்துள்ளார்.
அத்துடன் 52 வது காலாட் படைப்பிரிவின் சமிக்ஞை அதிகாரி, 6 வது வலுவூட்டல் சமிக்ஞைப் படையணி நிறைவேற்று அதிகாரி, 6 வது வலுவூட்டல் சமிக்ஞைப் படையணி கட்டளை அதிகாரி, பனாகொட சமிக்ஞை படையணி தள பணிமனை பணிநிலை அதிகாரி 2, இராணுவ தலைமையக தகவல் தொடர்புப் பிரிவின் கட்டளை அதிகாரி, 1 வது இலங்கை சமிக்ஞை படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 2 (ஒருங்கமைப்பு/பணியாளர் கடமைகள்) மற்றும் 7 வது வலுவூட்டல் சமிக்ஞைப் படையணி இரண்டாம் கட்டளை அதிகாரி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.
மேலும் அவர் 7 வது வலுவூட்டல் சமிக்ஞைப் படையணியின் பதில் கட்டளை அதிகாரி, 51 வது காலாட் படைப்பிரிவின் பணிநிலை அதிகாரி 1 (செயற்பாடு), இராணுவ தலைமையக இராணுவ செயலாளர் அலுவலக பணிநிலை அதிகாரி 1 (குறைகளைக் கையாளுதல்), இராணுவ தலைமையக இராணுவ செயலாளர் அலுவலகத்தின் பணிநிலை அதிகாரி 1 (புலனாய்வுப் பிரிவு), 5 வது இலங்கை சமிக்ஞை படையணி கட்டளை அதிகாரி, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரி அலுவலகத்தின் பணிநிலை அதிகாரி 1, சமிக்ஞை படையணி பயிற்சி பாடசாலை கட்டளை அதிகாரி, பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய சிரேஷ்ட ஒருங்கிணைப்பாளர், 543 வது பிரிகேட் தளபதி, சமிக்ஞை பிரிகேட் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் எல்லை இடர் மதிப்பீட்டு மையத்தின் பணிப்பாளர் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய பணிப்பாளர் நாயகம் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
சிரேஷ்ட அதிகாரிக்கு உத்தம சேவா பதக்கம் அவரது புகழ்பெற்ற மற்றும் விசுவாசமான சேவைக்காக பாராட்டி வழங்கப்பட்டுள்ளது.
தனது இராணுவ வாழ்க்கையின் போது, இலங்கை படையலகு பாதுகாப்பு அதிகாரிகள் பாடநெறி, அடிப்படை கணினி பாடநெறி மற்றும் இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி உள்ளிட்ட ஏராளமான உள்நாட்டு மற்றும் சர்வதேச பயிற்சி பாடநெறிகளை அவர் பயின்றுள்ளார். அவர் பயின்ற சர்வதேச பயிற்சி பாடநெறிகளில் இளம் அதிகாரிகள் (சமிக்ஞை) சிறப்பு அடிப்படை பாடநெறி பாகிஸ்தான், கென்யாவில் பாலின சமூக அடிப்படையிலான அனர்த்த முகாமைத்துவ பயிற்சி பாடநெறி, சீனாவில் 19 வது சர்வதேச கருத்தரங்கு பாடநெறி, ஜப்பானில் ஐக்கிய நாடுகளின் சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு பாடநெறி மற்றும் இந்தியாவில் தொழில்நுட்ப பணியாளர் கல்லூரி பாடநெறி ஆகியவை அடங்கும்.
மேலும், சிரேஷ்ட அதிகாரி பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் இராஜதந்திரம் மற்றும் உலக விவகாரங்களில் டிப்ளோமா, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ முதுகலை டிப்ளோமா (பாதுகாப்பு ஆய்வுகள்), மற்றும் இந்தியா சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் இராணுவ தொழில்நுட்பத்தில் முதுகலை அறிவியல் பட்டம் போன்ற உயர் கல்வியையும் கற்றுள்ளார்.