ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி தூதுக்குழு இராணுவத் தளபதியைச் சந்திப்பு

தற்போது உயர் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தூதுக்குழு, இலங்கைக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது செவ்வாய்க்கிழமை (11) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை சந்தித்தது.

இந்த விஜயம் ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கான வருடாந்த பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தக் குழுவிற்கு கேணல் லௌசேன் என்செங்கிமானா தலைமை தாங்கியதுடன் சிரேஷ்ட கல்விசார் உறுப்பினர் லெப்டினன் கேணல் ஜீன் பாப்டிஸ்ட் உவிமின்சி மற்றும் இரண்டு மாணவ அதிகாரிகள் இக்குழுவில் அடங்குகின்றனர்.

சந்திப்பின் போது, இராணுவத் தளபதி ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் அதிகாரிகளை தனது அலுவலகத்திற்கு வரவேற்று, அவர்களுடனான கலந்துரையாடலில் பாதுகாப்பு விடயங்கள் மற்றும் இருதரப்பு இராணுவ உறவுகள் குறித்த அறிவுகளைப் பரிமாறிக் கொண்டார்.

இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு வருகை தந்ததை நினைவுகூரும் வகையில், ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தூதுக்குழுவும் இராணுவத் தலைவரும் நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பின் அடையாளமாக நினைவுப் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.