கஜபா இல்லத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இராணுவ பதவி நிலை பிரதானிக்கு கௌரவிப்பு

இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் நியமிக்கப்பட்டதை முன்னிட்டு, சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் 2025 மார்ச் 21 ஆம் திகதி பாராட்டு விழா இடம்பெற்றது. படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ பதவி நிலை பிரதானிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் படையணியின் ஸ்தாபகரான மேஜர் ஜெனரல் டபிள்யூஐவீகேஎம் விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, இராணுவ பதவி நிலை பிரதானிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் சக அதிகாரிகளுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டார். இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை நினைவுகூரும் வகையில், கஜபா படையணியின் வளர்ச்சியையும் நீடித்த பாரம்பரியத்தையும் குறிக்கும் வகையில், படையணி தலைமையகத்தில் ஒரு மரக்கன்றை நட்டினார்.

அதன் பின்னர், அவர் சிப்பாய்களின் உணவகத்தில் நடைபெற்ற அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இராணுவ பதவி நிலை பிரதானி, படையணியின் அதிகாரிகள் உணவக பல்லூடக மண்டபத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு உரையாற்றினார். தனது உரையின் போது, தொழில்முறை சிறப்பிற்கு அவசியமான முக்கிய உத்திகள் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை அவர் வழங்கினார்.

சம்பிரதாய நிகழ்வுகள் முடிந்த பின்னர், இராணுவ பதவி நிலை பிரதானி, படையணி ஜிம்னாசியத்தில் புனரமைக்கப்பட்ட புதிய உட்புற பூப்பந்து மைதானத்தை திறந்து வைத்தார். படையணி பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் முன்னிலையில், புதிய மைதானத்தில் விளையாட்டு நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதைக் குறிக்கும் வகையில், நினைவுப் பதாகையை திறந்து வைத்தார்.