20th May 2025
ரணவிரு சேவா அதிகாரசபையின் வேண்டுகோளுக்கு இணங்க, நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளி போர் வீரர்களின் மருத்துவ பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐந்து வாகனங்கள் இன்று (மே 20) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தின் வாகன வளாகத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.
இந்த வாகனங்கள் அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்களின் உத்தரவின் பேரில் நன்கொடையாக வழங்கப்பட்டன. இது தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, ரணவிரு சேவை அதிகாரசபையிடம் ஒப்படைத்தார். இலங்கை இராணுவத் தலைமையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, மேஜர் ஆர்.எம்.இ.கே. ரத்நாயக்க எல்எஸ்சீ அவர்கள் அதிகாரசபையின் சார்பாக ஆவணங்களைப் பெற்றார்.
இந்த வாகனங்கள்அனுராதபுரம் அபிமன்சல, கம்புருபிட்டிய, பாங்கொல்ல, அத்திடிய மிஹிந்து செத் மெதுர மற்றும் ராகம ரணவிரு செவன ஆகிய விடுதிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மையங்கள் சேவையில் காயமடைந்த போர் வீரர்களுக்கு சிகிச்சை மற்றும் முழுமையான பராமரிப்பையும் மேற்கொள்கின்றது.
இந்த நன்கொடையில் இரண்டு மிட்சுபிஷி மொன்டெரோ ஜீப்புகள், ஒரு நிசான் பெட்ரோல் ஜீப், ஒரு டொயோட்டா கரினா மோட்டார் கார் மற்றும் ஒரு டொயோட்டா ஹய்லக்ஸ் வாகனம் ஆகியவை அடங்கும்.