22nd May 2025
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் ஹூவாய், ஹொனலுலுவில் 2025 மே 13 முதல் 15 வரை நடைபெற்ற தரைப்படை பசிபிக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி 2025 இல் சிறப்பு அதிதியாகப் பங்கேற்றார். அமெரிக்க இராணுவ சங்கத்தால் வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தரைப்படைகளின் பங்கையும், அமைதி மற்றும் மோதல்களின் போது கூட்டுப் படைக்கு அவர்களின் பங்களிப்பையும் எடுத்துக்காட்டும் ஒரு முக்கிய சர்வதேச தளமாக செயல்படுகிறது.
இந்த ஆண்டு கருத்தரங்கில் உலகெங்கிலும் இருந்து அரச அதிகாரிகள், பாதுகாப்புத் துறைத் தலைவர்கள் மற்றும் இராணுவத் தளபதிகள் உட்பட 2,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தரைப்படை பசிபிக் கருத்தரங்கு 2025 இல் உலகத் தரம் வாய்ந்த பேச்சாளர்களால் நடைமுறை தொழில்நுட்ப காட்சி விளக்கங்கள் மற்றும் இந்தோ-பசிபிக் அரங்கில் அமெரிக்க இராணுவத்தின் எதிர்காலம் தொடர்பாக கவனம் செலுத்தும் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த கருத்தரங்கின் போது, இராணுவத் தளபதி சிரேஷ்ட இராணுவத் தலைவர்களுடன் பல உயர் நிலையிலான கலந்துரையாடல்களை நடாத்தினார். இது பிராந்திய ஒத்துழைப்புக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியது. இந்த ஈடுபாடுகள் இந்தோ-பசிபிக் பகுதியில் நட்பு நாடுகளிடையே மூலோபாய கூட்டாண்மைகள் மற்றும் இயங்குதன்மையை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தின.