ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இலங்கை இராணுவத்தில் இருந்து 34 வருட சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் டி.சீ. பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள், 2025 மே 26 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:

மேஜர் ஜெனரல் டி.சீ. பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் 1990 நவம்பர் 03 ஆம் திகதி பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். ரத்மலானை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு கல்வியற் கல்லூரி மற்றும் தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் 1992 நவம்பர் 14 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை பொறியியல் படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் தனது சேவையின் போது அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2024 மார்ச் 31 அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்த்தப்பட்டார்.

இந்த சிரேஷ்ட அதிகாரி தனது 55 வயதில் 2025 மே 30 ஆம் திகதி முதல் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறுவார். தற்போது அவர் இராணுவத் தலைமையகத்தில் பிரதம களப் பொறியியலாளராக பணியாற்றுகின்றார்.

மேஜர் ஜெனரல் டி.சீ. பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் தனது பதவிக் காலத்தில் 7 வது கள பொறியியல் படையணி மற்றும் 1 வது கள பொறியியல் படையணியின் படைகுழுத் தளபதி, இலங்கை பொறியியல் படையணியின் வவுனியா சுயாதீன பட்டறை கட்டளை அதிகாரி, 1 வது கள பொறியியல் படையணியின் அதிகாரி கட்டளை, 56 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 3 (செயல்பாடுகள்), சுயாதீன படையணியின் அதிகாரி கட்டளை, ஹைட்டி ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணியின் இலங்கை படையலகின் அதிகாரி கட்டளை, 1 வது கள பொறியியல் படையணியின் அதிகாரி கட்டளை, 8 வது கள பொறியியல் படையணியின் பதில் இரண்டாம் கட்டளை அதிகாரி, 8 வது கள பொறியியல் படையணி தலைமையக குழுவின் அதிகாரி கட்டளை, பொறியியல் படையணி தலைமையகத்தின் பணிநிலை அதிகாரி 2 (நிருவாகம்), 57 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), 12 வது கள பொறியியல் படையணியின் (ஆதரவு) கட்டளை அதிகாரி, 6 வது கள பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி, பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் சிரேஷ்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், ஆராய்ச்சி பகுப்பாய்வு திட்டம் மற்றும் மேம்பாட்டுக் கிளையில் பணிநிலை அதிகாரி 1 (திட்டமிடல்), ஆராய்ச்சி பகுப்பாய்வு திட்டம் மற்றும் மேம்பாட்டுக் கிளையின் பதில் கேணல் (ஒருங்கிணைப்பு), இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்தின் பிரதி நிலைய தளபதி, 222 வது காலாட் பிரிகேடின் பதில் தளபதி, 242 வது காலாட் பிரிகேட் தளபதி, பொது பொறியியல் பிரிகேட் தளபதி, 14 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் பிரதித் தளபதி, இராணுவத் தலைமையகத்தில் தர நிர்ணய மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் பணிப்பாளர், தர நிர்ணய மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பொறியியல் காலாட் படைப்பிரிவின் தளபதி போன்ற பதவிகளை வகித்துள்ளதுடன் தற்போது பிரதம களப் பொறியியலாளராக பதவி வகிக்கின்றார்.

சிரேஷ்ட அதிகாரி இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய காலத்தில் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவையை பாராட்டி ரண சூர பதக்கம் மற்றும் உத்தம சேவா பதக்கம் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

களப் பொறியியலாளர் தரம் 1 பாடநெறி, படையணி கணக்கீட்டு அதிகாரிகள் பாடநெறி, படையணி நிருவாகப் பாடநெறி, ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் முன்-பயன்பாட்டுப் பயிற்சி பாடநெறி, ஐக்கிய நாடுகளின் சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரிகள் பாடநெறி மற்றும் இரசாயணவியல், உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிபொருள் (நிலை II) பாடநெறி ஆகிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கற்கைகளை சிரேஷ்ட அதிகாரி தனது பணிக்காலத்தில் கற்றுள்ளார்.

மேலும், சிரேஷ்ட அதிகாரி பங்களாதேஷ் பொறியியல் அதிகாரிகள் அடிப்படை பாடநெறி மற்றும் இந்தியாவில் ஒருங்கிணைந்த அதிகாரிகள் வெடிகுண்டு அகற்றும் பாடநெறி உள்ளிட்ட வெளிநாட்டு கற்கைகளையும் கற்றுள்ளார்.

இந்த சிரேஷ்ட அதிகாரி மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.

2016 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுமக்கள் பாதுகாப்பு பயிற்சியாளர்களுக்கான பயிற்சித் திட்டம், 2016 ஆம் ஆண்டு கென்யாவில் பாலின சமூக அடிப்படையிலான அனர்த்த முகாமைத்துவ பயிற்சி பாடநெறி மற்றும் 2018 ஆம் ஆண்டு சீனாவில் கடற்சார் பட்டுப்பாதை நாடுகளைச் சேர்ந்த திறமையாளர்களுக்கான உயர் பயிற்சி பாடநெறி போன்ற பல சர்வதேச பயிற்சி நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார்.