28th May 2025
வடமத்திய மாகாணத்தில் வசிக்கும் முன்னாள் போர் வீரர்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டு போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம், அனுராதபுரம் அபிமன்சல 1 நலவிடுதியில் 2025 மே 27 ஆம் திகதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் சேவையிலுள்ள இராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வருகை தந்த இராணுவத் தளபதியை அபிமன்சல 1 நல விடுதியின் தளபதி மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் மரியாதையுடன் வரவேற்றனர்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி செயலகத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட வாகனத்தை இராணுவத் தளபதி நல விடுதிக்கு உத்தியோகபூர்வமாக வழங்கினார். மேலும், இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகியோரால் 10 சக்கர நாற்காலிகள் மற்றும் 15 ஊன்றுகோல்கள் அடையாளமாக வழங்கப்பட்டன. பந்தே ஹெனேபொல குணரத்ன நாயக்க தேரரினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் மற்றும் புத்தர் சிலைகளும் பங்கேற்பாளர்களுக்கும் போர் வீரர்களின் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் அங்கவீனமுற்ற வீரர்கள், ஓய்வுபெற்ற பணியாளர்கள், சேவையிலுள்ள வீரர்கள் மற்றும் தற்போது மருத்துவ பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் உட்பட 2,000 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமில் மருத்துவ ஆலோசனைகள், செயற்கை உறுப்பு பராமரிப்பு, தோல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவமனைகள், மனநல ஆலோசனை மற்றும் ஊட்டச்சத்து வழிகாட்டுதல் ஆகியவை அடங்கியிருந்தது.
மருத்துவ முகாமில் கலந்து கொள்வதற்கு முன்னர், இராணுவத் தளபதி அட்டமஸ்தானாதிபதி அதி வண. பல்லேகம ஹேமரத்ன தேரர் மற்றும் ருவன்வெலிசேயவின் பிரதம வண. ஈதலவெடுனவெவ ஞானதிலக்க தேரர் ஆகியோரை சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.