6th December 2025
அதிக மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட சமீபத்திய சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 டிசம்பர் 06 ஆம் திகதி மஹியங்கனைக்கு விஜயம் மேற்கொண்டார்.
இராணுவத் தளபதி, 53 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தை பார்வையிட்டதுடன் தனது விஜயத்தைத் தொடங்கினார். அங்கு அவர் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.டி. கொடவத்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களிடமிருந்து செயற்பாட்டு விளக்கத்தைப் பெற்றார்.
பின்னர், அவர் சீரற்ற வானிலை காரணமாக அடித்துச் செல்லப்பட்ட எலஹர பண்டைய அணைக்கட்டுக்குச் சென்றார். இராணுவ இயந்திரங்களும் பணியாளர்களும் அந்த இடத்தில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பின்னர், இராணுவத் தளபதி 53 வது காலாட் படைப்பிரிவினால் நிறுவப்பட்ட கள நடவடிக்கை தலைமையகத்திற்கு விஜயம் செய்து, துட்டுகெமுனு மண்டபத்தில் பிரிகேடியர் பி.ஏ.டி.என்.கே. புலத்சிங்கள ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களிடமிருந்து தற்போதைய சூழ்நிலையின் விளக்கத்தைப் பெற்றார்.
பின்னர் அவர் மஹியங்கனையில் நிறுவப்பட்டுள்ள இந்திய இராணுவ மருத்துவமனையை ஆய்வு செய்தார். அங்கு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் மருத்துவ உதவிகள் குறித்து மருத்துவமனையின் தளபதியினால் விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை பார்வையிட யஹங்கலைக்கும் விஜயம் மேற்கொண்டார். பின்னர் சுரக்ஷா இடம்பெயர்ந்தோர் நிலையத்திற்கு சென்று, இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, அவர் உடுதும்பர பிரதேசத்திற்குச் சென்று மண்சரிவினால் பாதிக்கப்பட்ட ஏனைய இடங்களை பார்வையிட்டார். இராணுவத் தளபதி, 5 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியை பார்வையிட்டதுடன் இந்த விஜயத்தை முடித்துக் கொண்டார். அங்கு அவர் முதலாம் படையின் பணியாளர்களுடன் கலந்துரையாடி, தொடர்ச்சியான அனர்த்த மீட்பு நடவடிக்கைகளின் போது அவர்களின் முயற்சிகளைப் பாராட்டினார்.