5th September 2025
2 வது விஷேட படையணியின் கடமையில் இல்லாது விடுமுறையில் இருந்த லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.எம்.வீ.எம் பண்டார, நேற்று மாலை (04) எல்ல-வெல்லவாய வீதியில் ராவணன் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட போது தலையில் பலத்த காயம் ஏற்பட்ட போதிலும், தனது துணிச்சலை வெளிப்படுத்தி மூவரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
இரவு 9.20 மணியளவில் விபத்து நடந்த இடத்தை இராணுவ வீரர்களின் முதல் குழு அடைந்தது. ஏற்கனவே ஏராளமானோர் கூடியிருந்த போதிலும், அவர்களில் விஷேட படையணியின் டி-சர்ட் அணிந்த ஒரு இளைஞன், உள்ளூர் இளைஞர்களின் ஒரு சிறிய குழுவை மீட்புப் பணிகளில் வழிநடத்திச் சென்றான்.
பேருந்து நின்றிருந்த இடத்தில், நான்கு உடல்களும் மூன்று காயமடைந்த பயணிகளும் வாகனத்தின் மேல் பகுதியில் சிக்கியிருந்தனர். சாதாரணமாக எட்டிக்கூட முடியாத அந்த இடத்தில், தைரியத்துடன் வீரச் சிப்பாய் தன் உயிரை பணயம் வைத்து கீழே இறங்கி, அனைவரையும் பாதுகாப்பாக மீட்டார்.
காயமடைந்த பயணிகளில் ஒருவரைத் தூக்குவதற்காக அவரது உடலில் கட்டப்பட்டிருந்த கயிற்றைப் பயன்படுத்தும்போது, விழுந்த பாறை அவரது தலையில் தாக்கியதில் காயம் ஏற்பட்டது. இருப்பினும், பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்படும் வரை வலி இருந்தபோதிலும் அவர் தனது மீட்புப் பணியைத் தொடர்ந்தார். பின்னர் அவர் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.