புதிய பொலிஸ்மா அதிபர் இராணுவத் தளபதியை சந்திப்பு

புதிய பொலிஸ்மா அதிபர் திரு. பிரியந்த வீரசூரிய அவர்கள் 2025 செப்டெம்பர் 12 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

வருகை தந்த பொலிஸ்மா அதிபருக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேடிபீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களினால் இலங்கை சமிக்ஞை படையணி படையினரால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதை பரிசீலிக்க பொலிஸ்மா அதிபர் அழைக்கப்பட்டார்.

தொடர்ந்து, இராணுவத் தளபதி, வருகை தந்த பொலிஸ்மா அதிபரை மரியாதையுடன் வரவேற்று, அனைத்து முதன்மை பணிநிலை அதிகாரிகளையும் அறிமுகப்படுத்தினார். பின்னர் அனைவரும் குழுப்படம் எடுத்துக் கொண்டனர்.

சந்திப்பின் போது, இராணுவத் தளபதி மற்றும் பொலிஸ்மா அதிபர், பல்வேறு பொறுப்புகள் மற்றும் பணிகளில் இராணுவம் மற்றும் பொலிஸ்துறையினருக்கு இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை நினைவுகூர்ந்தனர். அத்துடன் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களும் இந்த கலந்துரையாடலில் இணைந்து கொண்டார்.

விஜயத்தின் நிறைவில், அன்றைய நிகழ்வின் முக்கியத்துவத்தை நினைவுகூறும் வகையில் நினைவுப் பரிசில்கள் பரிமாறிக் கொண்டனர். பின்னர், பொலிஸ்மா அதிபர், தளபதி அலுவலகத்தை விட்டு வெளிச்செல்வதற்கு முன்னர் விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது பாராட்டு குறிப்புகளை பதிவிட்டார்.