பனாகொடையில் 2026 இராணுவ கிரிக்கெட் போட்டி நிறைவு

இலங்கை இராணுவ கிரிக்கெட் குழுவினால் நடாத்தப்பட்ட 2026 ஆம் ஆண்டு இராணுவ கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா 2026 ஏப்ரல் 11 ஆம் திகதி பனாகொடை இராணுவ மைதானத்தில் நடைபெற்றது. 2026 மார்ச் 02 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டித்தொடரில், டி20, 50 ஓவர் ‘ஏ’ பிரிவு மற்றும் 50 ஓவர் ‘பி’ பிரிவு என போட்டிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியானது, உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.என். விஜேகோன் என்டிசீ ஏஏடிஓ அவர்களின் பங்கேற்புடன் நடாத்தப்பட்டது.

டி20 பிரிவில், இலங்கை பீரங்கி படையணி சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டதுடன், கஜபா படையணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. பொம்படியர் எம்.ஜே.எஸ். பெரேரா தனது சிறப்பான சகல துறை ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடரின் நாயகன் மற்றும் இறுதிப் போட்டி நாயகன் ஆகிய விருதுகளை வென்றார்.

50 ஓவர் ‘ஏ’ பிரிவில், இலங்கை இராணுவ போர் கருவி படையணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதுடன், இலங்கை கவச வாகனப் படையணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. சிப்பாய் கே.ஏ.எஸ். தெவ்திலின தொடர் நாயகனாக அங்கீகரிக்கப்பட்டார்.

50 ஓவர் ‘பி’ பிரிவில், இலங்கை இராணுவ பொது சேவை படையணி சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், பொறியியல் சேவைகள் படையணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. சிப்பாய் எம்.எம்.எச்.சி. ஹேரத் தொடர் நாயகன் விருதைப் பெற்றார்.