15th October 2025
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), அவர்கள் இலங்கை இராணுவத்தின் முக்கிய வெடிமருந்து மற்றும் ஆயுத களஞ்சியங்களுக்கு இரண்டு நாள் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொந்தா (ஓய்வு) மற்றும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ ஆகியோரும் கலந்துக் கொண்டனர். இந்த விஜயத்தின் போது, பிரதி அமைச்சர் வெடிமருந்து களஞ்சிய தொகுதிகளை ஆய்வு செய்ததுடன், அந்த வளாகத்தின் தற்போதைய செயற்பாடு மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்தார்.
சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்டக் கூட்டத்திற்கும் அவர் தலைமை தாங்கினார். இதன்போது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல், அவசரகால நிலைமைகளுக்கு முகம் கொடுக்க தேவைப்படும் திட்டங்களை உருவாக்குதல், வெளிப்புற நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், சீரான செயற்பாடு, பொறுப்புக்கூறல் மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை உறுதி செய்வதற்காக நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல முக்கியமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சு, ஏனைய சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து அதன் தேசிய நோக்கங்களுக்கு ஏற்ப நாடலாவிய ரீதியில் உள்ள அனைத்து இராணுவ வசதிகள் உட்பட, பாதுகாப்பைக் கண்காணிக்கவும், மதிப்பிடவும், மேம்படுத்தவும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
(செய்தி (www.defence.lk)