2nd August 2025
முதலாம் படை தளபதியும் இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 ஓகஸ்ட் 01 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:
மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 1990 ஜூலை 14 அன்று இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பாடநெறி எண்–34 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் 1992 ஜூன் 06, இரண்டாம் லெப்டினன் நிலையில் விசேட படையணியில் நியமிக்கப்பட்டார். அவர் தனது சேவைக் காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு 2023 ஒக்டோபர் 10 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்த்தப்பட்டார்.
சிரேஷ்ட அதிகாரி 2025 ஓகஸ்ட் 06 ம் திகதி தனது 55 வயதை அடைந்ததும், இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறும் போது, அவர் முதலாம் படை தளபதியும் இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதியுமாக பதவி வகிக்கின்றார்.
தனது இராணுவ வாழ்க்கையில், அவர் 2வது விசேட படையணியின் குழுத் தளபதியாகவும், 2வது விசேட படையணி 'இ' பிரிவின் அதிகாரி கட்டளை, விசேட படையணி பயிற்சி பாடசாலையில் 3வது பணி நிலை அதிகாரி, 3வது விசேட படையணியின் 'எம்' பிரிவின் அதிகாரி கட்டளை, 3வது விசேட படையணியின் செயல்பாடு மற்றும் பயிற்சி அதிகாரி, 2வது விசேட படையணியின் பதில் இரண்டாம் கட்டளை அதிகாரி, விசேட படையணி பிரிகேட்டில் பிரிகேட் மேஜர், 3வது விசேட படையணியில் இரண்டாம் கட்டளைத் அதிகாரி, விசேட படையணி பயிற்சி பாடசாலையின் பிரதி பயிற்றுவிப்பாளர், 2வது விசேட படையணியின் பதில் கட்டளைத் அதிகாரியாகவும், 3வது விசேட படையணியின் கட்டளைத் அதிகாரியாகவும் பணியாற்றினார். மேலும்,111 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தில் சிரேஷ்ட பணிநிலை அதிகாரி, விசேட படையணி தலைமையகத்தில் பணி நிலை அதிகாரி 1 (நிர்வாகம்), இராணுவத் தலைமையக தளபதியின் செயலகத்தின் கேணல் (தளபதி செயலகம்), 642 வது காலாட் பிரிகேட் தளபதி, அனர்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் (செயல்பாடுகள்), 53 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் (பொது பணியாளர்), இராணுவத் தலைமையகத்தில் இயக்க பணிப்பகத்தின் பணிப்பாளர் மற்றும் பின்னர் பணிப்பாளர் நாயகம், 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, முதலாம் படைத் தளபதி மற்றும் இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதி போன்ற முக்கிய நியமணங்களை வகித்துள்ளார்.
இலங்கை இராணுவத்திற்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மற்றும் வீரம் மிக்க சேவையை அங்கீகரிக்கும் விதமாக, அவருக்கு நான்கு சந்தர்ப்பங்களில் ரண விக்ரம பதக்கம் மற்றும் ரண சூர பதக்கம் வழங்கப்பட்டது.
இராணுவப் பயிற்சியைப் பொறுத்தவரை, அவர் விசேட படையணியின் அடிப்படைப் பாடநெறி, அடிப்படை குறிபார்த்து சுடல் பாடநெறி மற்றும் சமநிலை பாணி பாடநெறி உள்ளிட்ட பல உள்நாட்டு இராணுவப் பயிற்சிகளை முடித்துள்ளார். அவரது சர்வதேச பயிற்சியில் இந்தியாவில் கொமாண்டோ பாடநெறி, மோர்டார் அதிகாரிகள் பாடநெறி, இளம் அதிகாரிகள் பாடநெறி, பாராசூட் அடிப்படைப் பாடநெறி, ஜூனியர் கட்டளை பாடநெறி, துருக்கியில் அனர்த மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகள் பாடநெறி மற்றும் பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு மற்றும் போர் பாடநெறி ஆகியவை அடங்கும்.
கல்வி தகமையாக, அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தில் பேரிடர் பகுப்பாய்வு முகாமைத்துவத்தில் நிர்வாக டிப்ளோமா, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சேவை முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு முகாமைத்துவ மற்றும் போர் ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.