17th July 2025
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையால் நடத்தப்படும் வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹெராவை ஒளிரச் செய்வதற்காக, இலங்கை இராணுவம் தொடர்ச்சியாக 12 வது ஆண்டாக ஆறு தொன் உலர்ந்த தேங்காய்களை (கொப்பரை) 2025 ஜூலை 17 அன்று நன்கொடையாக வழங்கியது.
இந்த நிகழ்வை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நடத்தினார். விஜயபாகு காலாட் படையணியினால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி, இலங்கையின் வளமான மத மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் இராணுவத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
வருகை தந்த இராணுவத் தளபதியை, மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதியும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச். பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்கள் அன்புடன் வரவேற்றார். பின்னர் தளபதி, ஸ்ரீ தலதா மாளிகையின் நிர்வாகச் செயலாளர் திரு. அனுர பண்டாரவை சந்தித்தத்துடன், மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டார்.
பௌத்த கொடிகள் மற்றும் தாமரை பூக்கள் ஏந்திய படையினர் ஊர்வலமாக தலதா மாளிகை வளாகத்திற்கு கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்தனர். வருடாந்த எசல பெரஹெர விழாக்களுக்கு இராணுவத்தின் தொடர்ச்சியான ஆன்மீக பங்களிப்பை அடையாளப்படுத்தும் வகையில், தலதா மாளிகை உள் அறையில் சம்பிரதாய சடங்குடன் ஒப்படைப்பு நடைபெற்றது.
தேசிய மரபுகளை நிலைநிறுத்துவதில் இராணுவத்தின் கூட்டு அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.