இராணுவத் தளபதி யாழ். குடாநாட்டிற்கு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் யாழ். குடாநாட்டிற்கு 2025 ஒக்டோபர் 18 முதல் 20 ம் திகதி வரை இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டார்.

தனது விஜயத்தின் போது, யாழ். பாதுகாப்பு படை தலைமையக எல்லை பிரதேசத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள படையினரின் நல்வாழ்வையும், செயற்பாட்டுத் தயார்நிலையையும் மதிப்பாய்வு செய்தார். யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த தளபதியை, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார்.

பின்னர், வசாவிளானில் நிர்மாணிக்கப்பட்ட புதிய குணநல மேம்பாட்டு நிலையம், பலாலி இராணுவ தள மருத்துவமனை மற்றும் சுள்ளிபுரம் அமெரிக்க மிஷனரி தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 5 வது இலங்கை இராணுவ சேவை படையணி மற்றும் 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.

தனது விஜயத்தின் ஒரு பகுதியாக, இராணுவத் தளபதி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ நாகவிகாரைக்கு சென்று, அங்கு வண. மீகஹஜந்துர ஸ்ரீ விமல தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றார். அவர் யாழ் பிஷப் இல்லத்திற்கு சென்று, வண. கலாநிதி ஜஸ்டின் பெர்னார்ட் ஞானபிரகாசம் அவர்களை சந்தித்தார்.

தனது விஜயத்தின் இரண்டாவது நாளில், இராணுவத் தளபதி 9 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 11 வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 521 வது காலாட் பிரிகேட் ஆகியவற்றை பார்வையிட்டார்.