இராணுவத் தளபதி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஜூலை 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

2025 ஜூலை 19 ஆம் திகதி கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக முகாம் வளாகத்திற்கு வருகை தந்த தளபதியை கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.கே.டபிள்யூ.டபிள்யூ.எம்.ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். பின்னர், இராணுவத் தளபதி சம்பிரதாயங்களுக்குமைய முகாம் வளாகத்தில் ஒரு மரக்கன்றை நாட்டியதுடன், சிரேஷ்ட அதிகாரிகளுடன் குழுப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, 22, 23 மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகளால் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும், 7 வது இராணுவ புலனாய்வு படையணி மற்றும் 3 வது (தொ) இராணுவ புலனாய்வு படையணிகளின் கட்டளை அதிகாரிகள் தங்கள் செயற்பாடுகள் குறித்து இராணுவத் தளபதிக்கு விளக்கமளித்தனர்.

தொடர்ந்து, இராணுவத் தளபதி முகாம் உடற்பயிற்சி கூடத்தில் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தில் இணைந்து கொண்டதுடன், அதிகாரிகள் மற்றும் படையினருடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினருக்கு உரையாற்றினார். மேலும் அதிதிகள் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது எண்ணங்களையும் வாழ்த்துக்களையும் பதிவிட்டதை தொடர்ந்து அனைத்து நிலையினருக்குமான மதிய உணவிருந்து வழங்கப்பட்டது. பின்னர், அவர் 232 வது காலாட் பிரிகேடிற்கு விஜயம் மேற்கொண்டார்.

இராணுவத் தளபதி முன்னர் பரோன்ஸ் கெப் என்று அழைக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தொப்பிகல பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு, போர்வீரர்களின் நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தி வீரமரணமடைந்த போர்வீரர்களின் தியாகங்களை கௌரவித்தார்.

பின்னர், இராணுவத் தளபதி, 2025 ஜூன் 29 ஆம் திகதி புனானியில் எளிய குடும்பத்திற்கு 7 வது கெமுனு ஹேவா படையணியினால் வழங்கப்பட்ட வீட்டின் தற்போதைய நிலையை ஆய்வு செய்தார்.

மறுநாள், இராணுவத் தளபதி, 2025 ஜூலை 20 ஆம் திகதி பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடமான திம்புலாகல வன மடாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி, மத நிகழ்வில் கலந்து கொண்டு, திம்புலாகல வன மடாலயத்தின் தலைமை தேரர் வண. திம்புலாகல ராகுலலங்கார நாயக்க தேரரை சந்தித்து ஆசிகளைப் பெற்றார். பின்னர், இராணுவத் தளபதி, மடாலயத்திற்கு கட்டுமானப் பொருட்களை நன்கொடையாக வழங்கினார். அதே வேலை, ஸ்ரீ மஹா காசியப்ப பிரிவேனாவின் மதகுருமார்கள் மற்றும் மாணவர்களுக்காக இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் வழங்கப்பட்ட நன்கொடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் இராணுவத் தளபதி கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் வண. கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆகியோரை சந்தித்தார்.

இராணுவத் தளபதி திருகோணமலை 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகம் மற்றும் 2 வது (தொ) கஜபா படையணி ஆகியவற்றிற்கு விஜயம் மேற்கொண்டதுடன் நிகழ்வு நிறைவடைந்தது.