16th January 2026
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இலங்கை பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து 2026 ஜனவரி 14 ஆம் திகதி நாட்டில் பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, பெரியளவிலான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
நாகர்கோவில் கடற்கரையில் இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து நடாத்திய சுற்றிவளைப்பின் போது, ஹெராயின் என சந்தேகிக்கப்படும் 24 சிறிய பொதிகளும், 4 மில்லியன் ரூபாய் பெறுமதியான 14.750 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகளும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மரதன்கேனி பொலிஸ் நிலையம் மேற்கொண்டு வருகின்றது.
அன்று பிற்பகல், இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் பருத்தித்துறை பொலிஸ் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், ஐம்பர்சிட்டி பிரதேசத்தில் பாழடைந்த வீட்டில் புதைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.4.8 மில்லியன் பெறுமதியான 28 கிலோகிராம் கேரள கஞ்சா அடங்கிய 12 பொதிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையின் போது, அல்வாய் பிரதேசத்திலுள்ள ஒரு வீட்டின் அருகே இருந்து ரூ.2 மில்லியன் பெறுமதியான 12 கிலோகிராம் கேரள கஞ்சா அடங்கிய 5 பொதிகளும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸ் நிலையம் மேற்கொண்டு வருகின்றது.
மேலும், வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகளுடன் இணைந்து மேலும் இரண்டு சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. கபலஹருவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அண்ணளவாக ரூபாய் 5 மில்லியன் பெறுமதியான 59 கிலோகிராம் உலர்ந்த கஞ்சா மற்றும் 6 கிலோகிராம் கஞ்சா விதைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வெல்லவாயவின் கம்பங்குவ பிரதேசத்தில் உள்ள போகஹபட்டன வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் 1.5 மில்லியன் பெறுமதியான சுமார் 31,000 கஞ்சா செடிகளை கண்டுபிடித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து கஞ்சா செடிகளும் அழிக்கப்பட்டதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.