16th June 2025
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி அவர்களின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தனது உத்தியோகப்பூர்வ இந்திய விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
மேலும், பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் சிங், இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படை பிரதானி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, எயார் சீப் மார்ஷல் அமர் பிரீத் சிங், பிரதி இராணுவ பிரதானி லெப்டினன் ஜெனரல் ராஜா சுப்பிரமணியம் மற்றும் தென்மேற்கு கட்டளைத் தளபதி லெப்டினன் ஜெனரல் மன்ஜிந்தர் சிங் உள்ளிட்ட முக்கிய இந்திய உயர் பாதுகாப்புத் தளபதிகளை இராணுவத் தளபதி சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு இருதரப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு, மூலோபாய கூட்டாண்மைகள் மற்றும் இரு ஆயுதப் படைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைந்து செயல்படுதல் தொடர்பில் கவனம் செலுத்தியது.
இந்த விஜயத்தின் போது, 2025 ஜூன் 14 அன்று டெஹ்ராதுன் இந்திய இராணுவ கல்வியற் கல்லூரி பயிலிளவல்களின் விடுகை அணிவகுப்பில் இராணுவத் தளபதி பங்கேற்றார்.
1990 இல் அதிகாரவாணைப்பெற்ற இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியின் பழைய மாணவரான இராணுவத் தளபதிக்கு இந்த நிகழ்வு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. நிகழ்விற்கு இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி லெப்டினன் ஜெனரல் நாகேந்திர சிங் தளபதியை மரியாதையுடன் வரவேற்றார்.
அன்றைய நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, இராணுவப் பயிற்சி பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பைப் புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்காக, இராணுவத் தளபதி இந்திய இராணுவப் பயிற்சி கட்டளையின் தளபதியான லெப்டினன் ஜெனரல் தேவேந்திர சர்மாவைச் சந்தித்து கலந்தரையாடினார்.
புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் இந்தியாவின் போர் வீரர்களுக்கு இராணுவத் தளபதி அஞ்சலி செலுத்தினார், இது இரு நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட இராணுவ சம்பிரதாயம் மற்றும் பரஸ்பர மரியாதையாகும்.
இவ்விஜயம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தவும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ் மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களும் சிறப்பு அழைப்பாளராக இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.