இந்தோ-பசிபிக் இராணுவ பிரதிநிதிகள் மாநாடு – 2025

14வது இந்தோ-பசிபிக் இராணுவ பிரதிநிதிகள் மாநாடு, 49வது இந்தோ-பசிபிக் இராணுவ முகாமைத்துவ கருத்தரங்கு மற்றும் 11வது சிரேஷ்ட பட்டியலிடப்பட்ட தலைவர்கள் மன்றம் ஆகியவை 2025 செப்டம்பர் 23 முதல் 26 வரை மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றன. இந்த நிகழ்வை மலேசிய இராணுவம் மற்றும் அமெரிக்க இராணுவம் இணைந்து நடத்தின. இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ இராணுவத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுக்குழுவின் தலைவராக இந்தோ-பசிபிக் இராணுவ பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். பிரிகேடியர் டீ எம் எஸ் ஜே தென்னகோன் ஆர்எஸ்பீ மற்றும் லெப்டினன் கேணல் எம் ஏ கே ஆர் கே அபேவிக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஆகியோர் இந்தோ-பசிபிக் இராணுவ முகாமைத்துவ கருத்தரங்கில் பங்கேற்றனர்.

இந்த ஆண்டு மாநாடு, "ஒற்றுமை உருவாக்குதல்: திறந்த கலாசார தொடர்பு மூலம் பன்னாட்டு நில அதிகார வலையமைப்புகளை மாற்றுதல்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டுள்ளதுடன் இது சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பகுதிக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பொதுவான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் நட்பு நாடுகளிடையே உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் கூட்டு புரிதலுக்கான பிராந்திய நிலப் படைகளுக்கு நீடித்த தளங்களை இந்த நிகழ்வு வழங்கியது. இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் 12 இராணுவத் தலைவர்கள் மற்றும் 13 சிரேஷ்ட இராணுவத் தலைவர்கள் உட்பட 25 நாடுகளைச் சேர்ந்த 190 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஒன்றிணைத்தது.

நிகழ்வின் ஒரு பகுதியாக, பதவி நிலை பிரதானி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பல இராணுவத் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட இராணுவத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியதுடன் இது இராணுவ-இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துதல், இராணுவ இராஜதந்திரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.