4th February 2026
இலங்கையின் 78 வது தேசிய சுதந்திர தினம் 04 பெப்ரவரி 2026 அன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் "இலங்கையை கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் கலந்துகொண்டார்.
வருகை தந்த அதிமேதகு ஜனாதிபதியை இலங்கையின் மாண்புமிகு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் அன்புடன் வரவேற்றார். அதன் பின்னர், முப்படை தளபதிகளுடன், பொலிஸ் மா அதிபர் இணைந்து, அன்றைய பிரதம அதிதியை பிரதான கொடிக்கம்பத்திற்கு அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவ, மாணவியர்கள் தேசிய கீதத்தை இசைத்தலுடன் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, விசேட மேடையில் இருந்த ஜனாதிபதி அவர்களுக்கு, பாடசாலை மாணவியர் குழுவினால் வழங்கப்பட்ட ‘ஜயமங்கள காத்தா’ மற்றும் ‘தேவோ வஸ்ஸது காலேன’ பாராயணம் மூலம் ஆசிர்வாதம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசத்தின் ஒருமைப்பாட்டைக் காக்கும் உன்னத நோக்கத்திற்காக உயிர்நீத்த அனைத்து தேசபக்தர்கள் மற்றும் போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர், முப்படை வீரர்களால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியதுடன் நாட்டின் முன்னேற்றம் மற்றும் அதன் முன்னோக்கிய பயணத்தில் ஒற்றுமையின் முக்கியத்துவம் குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இலங்கை இராணுவத்தின் 24 படையணிகளைச் சேர்ந்த வீரர்கள் அணிவகுப்பை வண்ணமயமாக்கினர். இதில் இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, பொலிஸ், பொலிஸ் விஷேட படையணி, சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள், தேசிய மாணவ சிப்பாய் படையணி உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற மற்றும் அங்கவீனமுற்ற போர்வீரர்கள் பங்கேற்றனர். இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் அணிவகுப்பு நடைபெற்றது. இலங்கையின் இராணுவ ஒழுக்கத்தையும் தேசிய பெருமையையும் வெளிப்படுத்திய அணிவகுப்பில், பங்கேற்பாளர்கள் இராணுவ மரபுகளுக்கு இணங்க ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தினர்.
அன்றைய கொண்டாட்டங்களின் இறுதிப் பகுதியில் கலாசார குழுக்களின் துடிப்பான நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் இலங்கை கலாசாரத்தின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் பாரம்பரிய நடனங்கள் இடம்பெற்றன. இந்நிகழ்வு, நாட்டின் பல்லின சமூகத்தின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் குறிக்கும் வகையில், அனைத்து இனத்தைச் சேர்ந்த பிள்ளைகள் தமிழில் தேசிய கீதத்தை பாடியதுடன் அன்றைய தின நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், இராஜதந்திரிகள், அமைச்சர்கள், தலைமை நீதிபதி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், சிவில் உயரதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.