21st December 2025
பாடநெறி இல.93, 94பி, குறுகிய கால பாடநெறி இல 21 சீ மற்றும் குறுகிய கால பாடநெறி இல 23, பெண் பாடநெறி 20, 62 (தொ) மற்றும் பெண் (தொ) பாடநெறி 19 ஆகியவற்றின் பயிலிவளல் அதிகாரிகளின் கல்வி மற்றும் இராணுவப் பயிற்சியின் உச்சக்கட்டத்தைக் குறிக்கும் இறுதி விளக்கக்காட்சி 2025 டிசம்பர் 20 அன்று இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த ஆண்டு விளக்கக்காட்சி "இலத்திரனியல் யுகத்தில் கலப்பினப் போர்: - நவீன இராணுவ உத்தியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு" என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்டதுடன் இது பயிலிவளல் அதிகாரிகளின் கல்விச் சிறப்பு, பகுப்பாய்வுத் திறன்கள் மற்றும் கல்வியற்கல்லூரி பயிற்சியின் போது உருவாக்கப்பட்ட தொழில்முறைத் திறனை வெளிப்படுத்தியது. இறுதி விளக்கக்காட்சி பயிலிவளல் அதிகாரிகள் தங்கள் ஆராய்ச்சித் திறன்களையும் அறிவுசார் வளர்ச்சியையும் வெளிப்படுத்த ஒரு தளமாக அமைந்தது.
இந் நிகழ்வில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் கே பீ அருண ஜெயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், அவர்களை இராணுவ கல்வியற் கல்லூரி தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ்.மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இணைந்து வரவேற்கப்பட்டார். பிரதான நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் பயிலிளவல் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட ஆராய்ச்சி வெளியீடுகளின் கண்காட்சி மற்றும் வழங்கல் நடைபெற்றதுடன் இது அவர்களின் அறிவுசார்ந்த செயற்பாடுகள் பற்றிய நுண்ணறிவை வழங்கியது.
விளக்கக்காட்சியைத் தொடர்ந்து, விளக்கக்காட்சி குறித்த விளக்கங்கள் மற்றும் கருத்துகளை வழங்க ஒரு அமர்வு நடத்தப்பட்டது. பின்னர், பயிலிளவல் அதிகாரிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆராய்ச்சி பங்களிப்புகளை முன்னிலைப்படுத்தி இலங்கை இராணுவ கல்வியற்கல்லூரியின் 7வது இதழ் வெளியிடப்பட்டது.
பின்னர், பிரதம விருந்தினர் கூட்டத்தினருக்கு உரையாற்றியதுடன் பயிலிளவல் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் கல்வி சாதனைகளைப் பாராட்டினார்.
இந் நிகழ்வில் முன்னாள் இராணுவ தளபதிகள், பொலிஸ்மா அதிபர் திரு. பிரியந்த வீரசூரிய, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் முன்னாள் தளபதிகள், பாதுகாப்பு இணைப்பாளர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பங்குபற்றினர்.