அமைதி காக்கும் பயிற்சியை வலுப்படுத்த ஜெர்மன் இராணுவ ஐ.நா. நடமாடும் பயிற்சி குழு இலங்கைக்கு விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் உள்ள இலங்கை இராணுவ வீரர்களுக்கான உயர் களப் பயிற்சிக்கான சாத்தியக்கூறு மதிப்பீட்டை மேற்கொள்ள, ஜெர்மன் பன்டேஸ்வெர் விமானப்படையின் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் நடமாடும் பயிற்சி குழு 2025 நவம்பர் 26 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தது.

முன்னெடுக்கப்படும் பயிற்சி, களப் பயிற்சிகள், போக்குவரத்து நடைமுறைகள், கூட்ட முகாமைத்துவ தந்திரங்கள் மற்றும் அபாயகரமான பொருட்களை அடையாளம் காணும் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நவம்பர் 27 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் ஆரம்பக் கலந்துரையாடல்கள் நடைபெற்றது. இதில் இலங்கை இராணுவ பொறியியல் பயிற்சிப் படசாலையின் தளபதி கேணல் ஜே.ஏ.சி.எஸ். ஜாகொட பீஎஸ்சீ, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் ஜெர்மன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நவம்பர் 28 ஆம் திகதி, எம்பிலிப்பிட்டிய இலங்கை இராணுவ பொறியியல் பயிற்சிப் படசாலைக்கு விரிவான கள விஜயத்தை மேற்கொண்ட குழு, வகுப்பறைகள், பயிற்சி வசதிகள் மற்றும் நடைமுறை பயிற்சி பகுதிகளை ஆய்வு செய்தது.

இறுதி கலந்துரையாடல், நடைபெறவிருக்கும் கூட்டுத் திட்டத்திற்கான பயிற்சி முறை, வரிசைப்படுத்துதல் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மதிப்பாய்வு செய்தது.