26th September 2025
தேசிய மாணவ சிப்பாய் படையணி, கல்வி அமைச்சுடன் இணைந்து, அகில இலங்கை மாணவ சிப்பாய் கீழைதேய பேண்ட் வாத்திய சவால் கிண்ணம் – 2025 ஐ 2025 செப்டம்பர் 25 அன்று ரன்டெம்பே தேசிய மாணவ சிப்பாய் படையணி பயிற்சி மையத்தில் நடத்தியது. இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
தேசிய மாணவ சிப்பாய் படையணி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.பீ.சி.ஆர் பிரேமதிலக்க ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் ரன்டெம்பே பயிற்சி மையத்தின் தளபதி கேணல் ஏ.பீ லியனகே ஆகியோருடன் இணைந்து பிரதம விருந்தினரை அன்புடன் வரவேற்றனர். பின்னர் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், அணிவகுப்பை ஆய்வு செய்வதற்கு முன்பு, கிழகத்திய இசைக்குழுவின் வெற்றியாளர்களுக்கு இராணுவத் தளபதி பதக்கங்களை வழங்கினார். நாடு முழுவதும் உள்ள 136 பாடசாலை படையணிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்தம் 44 மாணவ சிப்பாய் படையணிகள் இறுதிப் போட்டியில் பங்கேற்றன.
பரிசளிப்பு விழாவின் போது, ஆண்கள் பிரிவில் கண்டி வித்யார்த்த கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றதுடன் கண்டி தர்மராஜா கல்லூரி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இசைக்குழு கண்காட்சி பிரிவில் வித்யார்த்த கல்லூரி முதலிடத்தையும், தர்மராஜா கல்லூரி இரண்டாம் இடத்தையும் பிடித்தது.
பெண்கள் பிரிவில், பிலிமத்தலாவை ஸ்ரீ தீரானந்த கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றதுடன் குருநாகல் மலியதேவ பெண்கள் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இசைக்குழு கண்காட்சியில் மலியதேவ பெண்கள் கல்லூரி முதலிடத்தையும், ஸ்ரீ தீரானந்த கல்லூரி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
கண்டி வித்யார்த்த கல்லூரியைச் சேர்ந்த மாணவ சிப்பாய் சார்ஜன் டி.எம்.எச்.எஸ்.பி. திசாநாயக்க மற்றும் குருநாகல் மலியதேவ பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவ சிப்பாய் சார்ஜன் வீ.இ.ஜே. டி மால் ஆகியோர் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் சிறந்த டிரம் மேஜர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதம விருந்தினர், பாடசாலை மாணவர்களிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் அதே வேளையில், பாடத்திட்டத்தின் மூலம் ஒழுக்கமான இளைஞர்களை உருவாக்குவதில் தேசிய மாணவ சிப்பாய் படையணியின் பங்கை எடுத்துரைத்தார். “ஆயத்தமில்லாமல் இருக்காதீர்கள்” என்ற படையணியின் குறிக்கோளை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்துடன் மேலும் படையணியின் உயர் தரத்திற்கு ஏற்ற நடத்தையைப் பராமரிக்க மாணவ சிப்பாய்களை ஊக்குவித்தார். அணிவகுப்பின் போது ஈர்க்கக்கூடிய பயிற்சிகள் மற்றும் தொழின்முறையையும் அவர் பாராட்டினார்.
தொடர்ந்து, மாணவ சிப்பாய்களின் திறன்கள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணமயமான சிறப்பு இசைக்குழு கண்காட்சி நடைபெற்றது.
நிகழ்வின் முடிவில், தேசிய மாணவ சிப்பாய் படையணியின் பணிப்பாளர் இராணுவத் தளபதிக்கு ஒரு நினைவுப் பரிசை வழங்கியதுடன் தளபதியும் அவருக்கு நினைவு பரிசை கையளித்தார்.
இந்த நிகழ்வில் மதகுருமார்கள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், பொலிஸ் பிரதிநிதிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ சிப்பாய்கள், நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.