கஹகொல்ல மற்றும் தியதலாவையில் மேலும் இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை நிலையங்கள்
12th March 2020
கோவிட்-19 வைரஸ் தொற்றுநோயினை கட்டுப்படுத்தும் முகமாக பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் இலங்கை இராணுவமானது கஹகொல்ல மற்றும் தியத்தலாவை இராணுவ வைத்தியசாலையில் மேலும் இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை நிலையங்கள் இன்று மதியம் 12 ஆம் திகதியில் இருந்து இயங்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்விரு தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை நிலையங்களின் பொறுப்பதிகாரியான மேஜர் (வைத்தியர்) எல.டி ரத்னவீர அவர்களின் தகவலின் பிரகாரம், வெளிநாட்டு வதிவிட இலங்கையர்கள் மற்றும் சில தென் கொரிய நாட்டவர்கள் கஹகொல்ல மருத்துவ பரிசோதனை நிலையங்கள் மற்றும் தியத்தலாவை இராணுவ வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனையானது எட்டு உறுப்பினர்களைக் கொண்ட மருத்துவ குழுவினரால் 12 ஆம் திகதி மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பூனானை, கன்டக்காடு, கஹகொல்ல மற்றும் தியத்தலாவை ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை நிலையங்களுக்கான பொறுப்பதிகாரியும் இராணுவ நோய் தடுப்பு மற்றும் உள நல சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் கேணல் (வைத்தியர்) சவீன் செமகே அவர்களின் தலைமையில் விசேட மருத்துவக் குழுவினர் இச்செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களின் கட்டளையின் கீழ் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் இத்திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். |