புதிய இராணுவ தளபதி நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதாக தெரிவிப்பு
21st August 2019
இலங்கை இராணுவத்தின் 23 ஆவது புதிய இராணுவ தளபதியாக பதவியேற்ற லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தனது செய்தியில் நாட்டை அனைத்து அச்சுறுத்தல்களிலிருந்தும் பாதுகாப்பதாக தெரிவித்தார்.
இவர் வெளியிட்ட செய்தியின் விபரங்கள் கீழ்வருமாறு:-
"எங்கள் தாய்நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றையாட்சி நிலையை பாதுகாக்க இராணுவத்தின் தளபதியாக இராணுவத்திற்கு தலைமை வகிப்பது எனது முன்னுரிமையும், பிரதான கடமையாகும். இரண்டாவதாக, நாட்டின் அனைத்து மக்களுக்கும் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதி செய்வது எனது கடமையாகும், மூன்றாவதாக, இராணுவத்தினரது நலனையும், அவர்களது குடும்ப அங்கத்தவர்களையும் மேம்படுத்த நான் என்னை அர்ப்பணித்துள்ளேன் என்று இந்த நேரத்தில் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
உலகின் எந்தவொரு இராணுவமும் நாட்டின் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயக வாழ்க்கை முறைக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது. கடந்தகால மனிதாபிமான நடவடிக்கைகளின் போது, நாங்கள் அந்த வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்தோம், எந்தவொரு நாட்டிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவாறு சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் உரிமைகளுக்கு ஏற்ப நாம் செயல்பட்டோம் என்று, இந்த கால கட்டத்தில் நான் நினைவுகூர விரும்புகின்றேன்.
போர்க்காலத்தில், பிணைக் கைதிகளாகக் கைப்பற்றப்பட்ட பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த பொது மக்களை மீட்டெடுத்து நாம் சிறந்த இராணுவம் என்று உலக ரீதியில் நிரூபித்தோம். அத்துடன் எமது மனிதாபிமானத்தையும் வெளிக்காட்டினோம். சிங்கள, தமிழ், முஸ்லீம், பரங்கியர் மற்றும் மலே இனத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களாக எமது நாட்டில் வாழ்கின்றோம். ஆகையால் சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் பிணைப்பை வலுப்படுத்தியும், அதே நேரத்தில் அவர்களின் வாழ்க்கை உரிமையை உறுதி செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில், ஒரு தேர்ச்சியுள்ள திறமையான இராணுவத்தை நிலையான பயிற்சியின் மூலம் வெளிக்காட்ட விரும்புகிறேன், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராகவுள்ளோம். இலங்கை இராணுவத்தின் நற்பெயரையும் நம்பிக்கையையும் பாதுகாப்பது எமது பொறுப்பாகும். நவீன மற்றும் உலகளாவிய தரங்களுடன் பொருந்தக்கூடிய தொழில்நுட்ப அறிவைக் கொண்ட இராணுவத்தை உருவாக்குவதில் எனது கவனத்தை முன்வைத்துள்ளேன்.
அதேபோல், இராணுவ புலனாய்வுப் பிரிவுகளை மறுசீரமைக்கவும், சர்வதேச படைகளின் உத்திகளைக் கருத்தில் கொண்டு அவற்றை ஒரு உயர்ந்த நிலைக்கு உயர்த்தவும் நான் விரும்புகிறேன், அதே நேரத்தில் அவர்களின் அனுபவங்களையும் நடைமுறைகளையும் பகிர்ந்து கொள்கிறேன், ”என்று அவர் குறிப்பிட்டார்.
இராணுவ தளபதி தனது செய்தியில், அனைத்து இராணுவ வீரர்களின் திறனையும் மேம்படுத்துவதாகவும், எதிர்காலத்தில் சர்வதேச இராணுவங்களுடன் ஒத்துழைக்க தேவையான இராணுவ மற்றும் நிர்வாக அறிவை இராணுவத்தினருக்கு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
இராணுவத்தை வழிநடத்துவதற்கு என்னை இராணுவ தளபதியாக நியமித்ததை முன்னிட்டு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன். அத்துடன் கஜபா படையணியை ஸ்தாபித்த தந்தையான ஜெனரல் விஜய விமலரத்ன மற்றும் முன்னாள் இராணுவ தளபதிகளுக்கும் இத்தருணத்தில் நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன் என்று கூறினார். |