இராணுவ தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் இணைந்து அம்பாறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம்
29th November 2024
இந்த விஜயத்தின் ஒரு அங்கமாக வெள்ள நிவாரண நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் மாநாடு அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக் கூட்டம் கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் கௌரவ. வசந்த பியதிஸ்ஸ மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) ஆகியோர் தலைமையில் இடம்பெற்றதுடன், இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், இராணுவ தளபதி , கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி, கிழக்கு கடற்படை தளபதி, 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, அம்பாறை சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், மற்றும் அரச அதிகாரிகள் பங்குபற்றினர்.
இடம்பெயர்க்கும் நடவடிக்கைகளுக்கு இராணுவ வீரர்களை ஈடுபடுத்துதல், இடம்பெயர்ந்த பொதுமக்களின் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் தேவையான வசதிகளை வழங்குதல் போன்ற முக்கியமான செயல்பாட்டு உத்தரவுகள் தொடர்பாக மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது. அனர்த்த சூழ்நிலையை நிர்வகிப்பதில் இராணுவ வீரர்கள் காட்டிய பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை அரச அதிகாரிகள் பாராட்டினர்.
கலந்துரையாடலை தொடர்ந்து, பிரதி பாதுகாப்பு அமைச்சரும் இராணுவத் தளபதியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உள்ளக இடம்பெயர்வு மையங்களுக்குச் சென்று பார்வையிட்டனர். இந்த விஜயத்தின் போது, அவர்கள் மையங்களில் நிலைமைகளை கேட்டறிந்து, தேவைப்படுபவர்களுக்கு போதுமான ஆதாரங்கள் மற்றும் உதவிகள் வழங்க உள்ளூர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
2024 நவம்பர் 26 அன்று காரைதீவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்த பாடசாலை மாணவர்களின் இறுதி சடங்கிலும் இராணுவத் தளபதி கலந்துகொண்டார்.