75 வது இராணுவ ஆண்டு தினத்தை முன்னிட்டு ஜும்மா பள்ளிவாசலில் 'கிராத்' ஓதுதல்
3rd October 2024
எதிர்வரும் 75 வது இராணுவ ஆண்டு தினத்தை முன்னிட்டு சர்வமத அனுஷ்டானங்களின் தொடர்ச்சியாக இராணுவத்தின் இஸ்லாமிய அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இன்று (3) காலை கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் விசேட துவா பிரார்த்தனையில் ஈடுப்பட்டனர்.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை பிரிகேடியர் டிஎன் மஜீத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஐஎஸ்சீ அவர்கள் கொள்ளுபிட்டி ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினர்களுடன் இணைந்து வரவேற்றார்.
இஸ்லாமிய மத சம்பிரதாயத்திற்கு இணங்க புனித தலத்தை அலங்கரித்த பின்னர், பிரதம மௌலவி ஷேக் அர்கம் நூர் அமித் (மௌலவி) அவர்கள் அனைவரையும் பிரார்த்தனைக்கு அழைத்தார். நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்பாக மௌலவி ஆற்றிய மும்மொழி வரவேற்புரை நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது.
வழக்கமான இஸ்லாமிய மார்க்க பிரசங்கமான பயானில் இராணுவக் கொடி மற்றும் இராணுவ அமைப்புகளின் கொடிகளுக்கு ஆசிர்வாதம் வழங்கப்பட்டது. பின்னர் மௌலவி 'கிராத்' ஓதி 'துஆ' பிரார்த்தனை மேற்கொண்டார்.
விசேட இஸ்லாமிய மார்க்க வைபவத்தின் இறுதியில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் புனித வளாகத்தின் அபிவிருத்திக்காக நிதி நன்கொடையை வழங்கினார். மேலும் சகவாழ்வு, நல்லிணக்கம் தொடர்பான தனது கருத்துக்களை மௌலவிகளுடன் பகிர்ந்து கொண்டார்.
சிறப்பு பிரார்த்தனையில், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் பொது பக்தர்கள் குழுவும் பங்கேற்றனர். மார்க்க வைபவத்தின் இறுதியில், இராணுவ தளபதி நல்லெண்ணத்தின் அடையாளமாக கொள்ளுப்பட்டி ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபையின் தலைவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார். கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் ஜேஷ்வான் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
அதே வேளையில், அறங்காவலர் குழு சார்பில் பிரதி தலைவர் முகமது யாசர் நன்றியுரை ஆற்றினார்.
பின்னர் பிரதம அதிதி அனைத்து முக்கிய பங்கேற்பாளர்களுடன் குழு படம் எடுத்துகொண்டார். அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் கருத்துக்களை பதிவிட்டதுடன் நிகழ்வு நிறைவுற்றது. இராணுவ பதவி நிலை பிரதானி, முதன்மை பணி நிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பலர் பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டனர்.