நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க எங்கள் துணிச்சலான வீரர்கள் உறுதிபூண்டுள்ளனர் - இராணுவ தளபதி ‘வெற்றி தின’ செய்தியில்
19th May 2022
பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், 13 வது ஆண்டு ‘வெற்றி நினைவு தினம்’ (மே 18) அன்று வெளியிட்ட தனது விசேட செய்தியில் 13 வருடங்களுக்கு முன்னர் எமது நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்த எமது வீரமிக்க போர்வீரர்கள் தற்போதைய சவாலான காலத்திலும் தேசிய பாதுகாப்பை முன்னுரிமையாக உறுதிசெய்து அனைத்து இலங்கையர்களையும் நாட்டையும் பாதுகாப்பார்கள் என உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்த செய்தி பின்வருமாறு..
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் இறையாண்மைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், வன்னியில் கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி விடுதலைப் புலிகள் மீதான கடைசி மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பதின்மூன்று வருடங்களாகின்றன. பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதி என்ற வகையில், முழு இலங்கை மக்களுக்கும் பெரும் துயரம் மற்றும் அச்சமடைந்த பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்த 'வெற்றி தினத்தை' முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன். நாட்டில் அமைதியை நிலைகுலைப்பதற்காக புலிகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததன் பின்னணியிலும், புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச தலையீட்டின் பின்னணியிலும் கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டியிருந்தது என்பதை நீங்கள் நினைவுகூருவீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த மனிதாபிமான நடவடிக்கையின் ஆரம்பம் மாவிலாற்றில் மக்களின் தண்ணீர் தேவையை தடுத்து மேற்கொண்ட மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் செயலாகும். 2009 ஆம் ஆண்டு வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் முழு கிழக்கையும் பயங்கரவாதத்திலிருந்து விடுவித்த இராணுவ வீரர்கள் முழு நாட்டையும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்திலிருந்து விடுவித்தமை இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்று நான் நம்புகிறேன். அந்த வெற்றியைப் பெறுவதற்கு முன்னோடியாகப் பங்காற்றிய வெற்றிய பயணத்தில் 58 வது படைப்பிரிவின் அப்போதைய தளபதியாக என்னால் கடமையாற்ற முடிந்தது என்பதில் பெருமிதம் கொள்கின்றேன். அத்துடன், கூட்டுச் செயற்பாட்டின் பலனாக இந்த வெற்றியைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த தேசியத் தலைமை, அன்றைய முப்படைகளின் தளபதிகள் உட்பட பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள், களத்தில் இருந்த சிரேஷ்ட, கனிஷ்ட தளபதிகள். அந்த நேரத்தில் என்னுடன், போர்க்களத்தில் பல இன்னல்களைச் சந்தித்த வீரம் மிக்க வீரர்களையும் நான் மரியாதையுடன் நினைவுகூர விரும்புகிறேன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து தாய்நாட்டை விடுவிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையில் மிகப்பெரும் தியாகங்களைச் செய்த தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இலங்கை இராணுவத்தின் பெருமைமிக்க உறுப்பினர்கள் ஆற்றிய பங்கு அது இலங்கையர்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் என்பது எனது நம்பிக்கை. இந்த மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் பயங்கரவாதிகளால் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான தமிழ் சகோதர, சகோதரிகளை விடுவிக்க முடிந்தமையும் குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில், போரின் போது தாய்நாட்டிற்காக தங்கள் இளமை மற்றும் பொன்னான உயிர்களை தியாகம் செய்த வீரம் மிக்க போர்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் வீரமரணம் அடைந்த பொதுமக்கள் மற்றும் பல வழிகளில் இறந்த மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நினைவு கூர்வோம்.
அத்துடன், விடுதலைப் புலி பயங்கரவாதிகளுக்கு எதிரான 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவத் தளபதிகள் உட்பட படையினருக்கும் பொது ஊழியர்களுக்கும் இந்த சிறப்பு நாளில், போர் வீரர்களுக்கு தைரியத்தையும் ஆசிகளையும் வழங்கிய, போர் வீரர்களின் குடும்பத்தினருக்கும் நான் மரியாதை செலுத்த விரும்புகிறேன்.
இலங்கை இராணுவம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் துன்பமுற்றபொழுது மீட்டெடுப்பதில் முன்னணியில் உள்ளது. பல்வேறு தேசிய பேரிடர்களின் போது, உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும், பயங்கரவாதம், பேரிடர் நிவாரணம் மற்றும் கோவிட் போன்ற தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதில் இராணுவம் ஆற்றிய பங்களிப்பிற்கு அன்பான இலங்கைப் பிரஜைகள் சாட்சியாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும், பொது நலனுக்கும் இராணுவம் தயக்கமின்றி பங்காற்றியுள்ளது என்பது இரகசியமல்ல. பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதி என்ற வகையில், இந்தச் சந்தர்ப்பங்கள் அனைத்திலும் பொது மக்கள் மற்றும் ஊடகங்கள் இராணுவத்திற்கு வழங்கிய மகத்தான ஒத்துழைப்பை நான் குறிப்பாகப் பாராட்டுகிறேன்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்களின் கோரிக்கைகள் பல்வேறு தரப்பினரின் தூண்டுதலால் கடந்த சில நாட்களாக வன்முறையாக உருவெடுத்துள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேணுவதில் போர்வீரர்களாகிய நீங்கள் ஆற்றிய பொறுமை மற்றும் ஒழுக்கமான பங்கை நான் குறிப்பாகப் பாராட்டுகிறேன். நாட்டினையும் அதன் குடிமக்களின் உடைமைகளையும் உயிர்களையும் பாதுகாத்து அனைவரும் நிம்மதியாக வாழ்வதற்கு தேவையான சூழலை உருவாக்குவதே பாதுகாப்புப் படைகளாகிய எங்களின் முதன்மைப் பொறுப்பு என்பதையும் வலியுறுத்துகிறேன். மேலும், இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளில், அதை தனிப்பட்ட முறையில் பயன்படுத்திக் கொள்ள முயலும் வன்முறைகளை நோக்கி பொதுமக்களை பொதுவாகத் தூண்டும் பல்வேறு குழுக்களின் நோக்கங்களைத் தொடர அனுமதிக்க முடியாது. அதுபற்றி நாம் தெளிவாக புரிந்துகொண்டு நமது கடமையை செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டுகிறேன். சவாலான காலங்கள் இருந்தபோதிலும், "நாட்டினதும் அதன் மக்களினிதும் பாதுகாவலர்களாகச் செயல்படும் உங்கள், ஓய்வுபெற்ற போர்வீரர்கள் மற்றும் போர்வீரர்களின் குடும்பங்களின் நலனுக்கான ஐந்தாண்டு மூலோபாயத் திட்டத்தை இராணுவம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
ஆயுதப் படையில் ஏற்பட வேண்டிய காலத்திற்கேற்ற மேம்பாடுகளும், கட்டமைப்பு ரீதியான மாற்றங்களும் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இராணுவத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக வருடாந்தம் நடத்தப்படும் உத்தியோகபூர்வ பதவி உயர்வு நடைமுறைகளுக்கு இணங்க 13 வது வெற்றி தினத்தை ஒட்டி இராணுவத்தில் அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் மற்றும் படையினருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.
ஒவ்வொரு சவாலிலும் முன்வந்த இராணுவத்தின் ஒழுக்கமும், வீரமும் நிறைந்த போர்வீரர்களாகிய நீங்கள், பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் எமது தாய்நாட்டிற்குக் கிடைத்த சுதந்திரத்தை தொடர்ந்தும் பாதுகாத்து, கடந்த வருடங்களில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களை தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன். இதற்கு அனைத்து நாட்டு மக்களின் ஆதரவும் ஆசியும் உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன்.
இறுதியாக, இன்று தாய்நாடு எதிர்நோக்கும் இந்த சவாலான காலகட்டத்தில், நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பொது மற்றும் தனியார் சொத்துக்களை உயிர்ளை பாதுகாக்கவும், ஆயுதப் படைகளின் அனைத்துப் பொறுப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்ற உங்களுக்கு வலிமையும், தைரியமும், ஆசிகளும் கிடைக்க வேண்டுகிறேன்.
உங்கள் அனைவருக்கும் வெற்றிகரமான எதிர்காலம் அமையட்டும்!