நலன்புரி வசதிகளுடன் கூடிய சேவா வனிதா கட்டிட தொகுதி திறந்து வைப்பு

29th July 2022

இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் அழைப்பின் பேரில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் நாரஹேன்பிட்டிய மானிங் டவுன் விடுதியில் வசிக்கும் இராணுவதினருக்கான நலன்புரி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் அண்மையில் விரிவுபடுத்தி தரமுயர்த்தப்பட்ட ‘ சேவா வனிதா வரவு செலவு மைய’ தொகுதியினை வியாழன் (28) திறந்து வைத்தார்.

இந்த புதிய 'சேவா வனிதா வரவு செலவு மையமானது ஒரு சிறிய சுப்பர் மார்க்கெட், பேக்கரி, ஜூஸ் பார், அழகு கலை நிலையம், ஆண்களுக்கான முடி வெட்டும் கடை மற்றும் ஒரு தையல் கடை ஆகியவற்றைக் கொண்டுள்ளதுடன் சமூக பயன்பாட்டிற்காக ஒரு சிறிய விருந்து மண்டபத்துடன் கூடிய முழுமையாக புதுப்பிக்கப்பட்ட மாடி கட்டிடத்தையும் உள்ளடக்கியுள்ளது.

இந்நிகழ்வின் அன்றைய பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் வருகை தந்த போது, இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் மற்றும் அவரின் பாரியாரான இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவா வனிதா பிரிவின் தலைவியும் இராணுவ சேவா வனிதா பிரிவின் பிரதி தலைவியுமான திருமதி ஷிரோமலா கொடித்துவக்கு ஆகியோரால் வரவேற்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து மகா சங்கத்தினரின் 'செத் பிரித்' பராயணங்களுக்கு மத்தியில் தளபதி நாடா வெட்டி புதிய கட்டிடத்தினை திறந்து வைத்தார். பின்னர், இராணுவத் தளபதி மற்றும் அவரது குழுவினரின் பங்குபற்றுதலுடன் கட்டிட தொகுதியில் பழங்கால மரபுகளுக்கு அமைவாக எண்ணெய்-விளக்கு ஏற்றுதல் உள்ளிட்ட பாரம்பரிய சடங்குகள் நிகழ்த்தப்பட்டன.

பின்னர் சிறிய பல்பொருள் விற்பனை நிலையம், அழகு கலாச்சார நிலையம் மற்றும் புதிய முடி வெட்டும் நிலையம் ஆகிய இடங்களை பார்வையிட்ட லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் அங்குள்ள பணியாளர்களுடன் கலந்துரையாடி வாடிக்கையாளர்களுக்கு அதி உச்ச சேவை வழங்க வேண்டும் என குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து முதல் மாடியில் உள்ள சிறிய விருந்து மண்டபத்தை இராணுவத் தளபதி பார்வையிட்டதுடன் அங்கு கூடியிருந்த இலங்கை இராணுவ சேவா வனிதா பிரிவின் நிர்வாக உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

இலங்கை இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகளின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ், பொறியியலாளர் சேவை படையணியின் படையினரால் இந்த திட்டம் சில மாதங்களுக்குள் நிர்மாணிக்கப்பட்டது.

இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு, பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, போர்க்கருவி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஹிரோஷ வணிகசேகர, நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர, போர்க்கருவி சேவை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் இந்திராஜித் விதானச்சி, இராணுவ சேவா வனிதா பிரிவின் பிரதி தலைவி ஷிரோமாலா கொடித்துவக்கு, இராணுவ சேவா வனிதா பிரிவின் செயலாளர் திருமதி தனுஷா சந்துஷ்மி வீரசூரிய, இராணுவ சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள், இராணுவ சேவா வனிதா பிரிவின் கேணல் ஒருங்கிணைப்பு அதிகாரி கேணல் நளிந்திர மகாவிதான, மற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.