இரணுவத்தின் முன்னிலை சுகாதார படைகளுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது
29th January 2021
இந்திய அரசாங்கத்தனினால் நன்கொடையாக வழங்கப்பட்ட, 'அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட்' ('AstraZeneca Covishield') தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (29) இலங்கை இராணுவ வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதற்கமைய கொவிட் – 19 வைரஸ் தடுப்புக்காக முன்னிலையிலிருந்து செயலாற்றும் சில இராணுவ வீரர்களுக்கு முதற் கட்டமாக இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இலங்கை இராணுவ வீரர்கள் கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளானவர்களை தனிமைப்படுத்தல், குணப்படுத்தல் செயற்பாடுகளுக்காக பெருமளவில் பங்களிப்புச் செய்து வருகின்றனர். அதன்படி நாடளாவிய ரீதியிலுள்ள 15 இராணுவ வைத்தியசாலைகளில் இன்று (29) தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
அதன்படி முதல் தடுப்பூசி, இராணுவத்தின் தடுப்பு மருந்துகள் மற்றும் மனநல மருத்துவ சேவைகள் பணியகத்தின் பிரதி பணிப்பாளர் கேணல் சவீன் சேமகேவுக்கும், அதனைத் தொடர்ந்து இராணுவத்தின் முன்னிலை சுகாதார சேவையினர் இருவருக்கும் (அதிகாரி மற்றும் சிப்பாய்) செலுத்தப்பட்டது.
முதல் தடுப்பூசி ஏற்றும் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வருகை தந்த கொவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, மூத்த அதிகாரிகள், இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் உதவி பாதுகாப்பு இணைப்பாளர் ஆகியோர் இணைந்து வரவேற்றனர்.
இந்நிகழ்வின் ஆரம்பகட்டமாக கொழும்பு இராணுவ வைத்தியசாலையிலுள்ள வைத்திய அதிகாரிகளுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதுடன் இந்தியா இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த தடுப்பூசிகள் நேற்று (28) மாலை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டு 24 மணிநேரத்துக்குள் குறித்த இராணுவ சுகாதார பிரிவினருக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
அண்மையில் இலங்கைக்கு தடுப்பூசிகளை பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கயை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்திருந்த நிலையில் அந்த கோரிக்கைக்கு விரைவில் பதிலளித்துள்ள இந்திய பிரதமர் அந்நாட்டின் பிரதான தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடமிருந்து சுமார் 500,000 கொவிட் – 19 தடுப்பூசிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.
அந்த தடுப்பூசிகள் A1 281 விமானத்தின் ஊடாக (28) விமான நிலையத்தை வந்தடைந்தது.
'’ஒரு நபருக்கு இரு தடவைகள் ஏற்றப்பட வேண்டிய இந்த தடுப்பூசி வகைகளை ஏற்றும் பணிகள் கொழும்பு தொற்றுநோயியல் வைத்தியசாலை, கொழும்பு தேசிய மருத்துவமனை, ராகமை வைத்தியசாலை மற்றும், பனாகொடையிலுள்ள இராணுவ வைத்தியசாலை உள்ளிட்ட ஆறு வைத்தியசாலைகளில் இன்று (29) நடைப்பெற்றுள்ளது.
அதனையடுத்து திட்டமிடப்பட்டவாறு நாட்டின் மற்றைய பகுதிகளுக்கும், அனைத்து இராணுவ வைத்தியசலைகளுக்கும், கொண்டு செல்லப்படும் இந்த தடுப்பூசி ஏற்றுவதற்கான அவசியத்தை கொண்டுள்ளவர்களுக்கு மட்டுமே ஏற்றப்படும் மற்றும் அனைத்து நிகழ்வும் நம்பகத்தன்மையாக இடம்பெறும் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். |