இராணுவ தினத்தை முன்னிட்டு ஜூம்ஆ பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனை

3rd October 2018

இலங்கை இராணுவத்தின் 69ஆவது ஆண்டு நிறைவு மற்றும் இராணுவத் தினத்தை முன்னிட்டு கொழும்பு, கொள்ளுப்பிடி ஜூம்ஆ பள்ளிவாசலில் 3ஆம் திகதி காலை விஷேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ முஸ்லிம் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ச ஜயா அவர்கள் வரவேற்றார்.

பள்ளிவாசல் இமாம், மௌலவி அல்ஹாபிழ் அப்லல் அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான மையத்தின் பணிப்பாளர் மௌலவி அஷ்ஷெய்க் முனீர் முளப்பர் (நளீமி) அவர்கள் பயான் நிகழ்த்தினார். அத்துடன் இராணுவ கொடி மற்றும் படையணிகளின் கொடிகள் வைக்கப்பட்டிருந்த அதேசமயம், மௌலவி எம். ரிஸ்வான் அவர்களினால் விஷேட துஆப் பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.

பிரார்த்தனையைத் தொடர்ந்து இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவினால் பள்ளிவாசல் அபிவிருத்திக்கான நிதியுதவியும் நினைவுச் சின்னமும் மேற்படி பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் அல்ஹாஜ் கலீல் மொஹம்மட் மற்றும் பிரதித் தலைவர் அல்ஹாஜ் முஸ்லிம் சலாஹூத்தீன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டதுடன் மௌலவிமார்களுக்கும் அன்பளிப்புக்களை வழங்கி வைத்தார். அத்துடன் பள்ளிவாசல் நிர்வாக சபையின் சார்பில் இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.

பள்ளிவாசல் நிர்வாக சபையின் பிரதித் தலைவர் அல்ஹாஜ் முஸ்லிம் சலாஹூத்தீன் நன்றியுரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் இராணுவத்தின் பிரதிப் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, இராணுவ நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ சிரேஷ்ட உயர் அதிகாரிகளும் இராணுவத்திலுள்ள முஸ்லிம் உயர் அதிகாரிகள் மற்றும் வீரர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இராணுவத்தின் 69ஆவது ஆண்டு நிறைவு மற்றும் இராணுவத் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட வழிபாடுகள் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை, அநுராதபுரத்தில் உள்ள ஜயஸ்ரீ மஹா போதி, மற்றும் பொரல்லை கிறிஸ்தவ தேவாலயத்திலும் இடம்பெற்றன. |