அரச உடைமைகள் & உயிர்களை பாதுகாக்க எந்தவொரு தீங்கான சந்தர்ப்பத்திலும் தமது பலத்தினை பிரயோகிக்க இராணுவத்தினர் அதிகாரம் பெற்றுள்ளனர்

14th July 2022

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம், ஆயுதப்படை மற்றும் காவல்துறை உறுப்பினர்கள், நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை அமுல்படுத்துவதற்கும், நாட்டு மக்கள், பொதுச் சொத்துக்கள் மற்றும் நாட்டைப் பாதுகாப்பதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.எமது நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து அரசமைப்பில் உள்ளவாறு குடியரசு மக்களின் இறையாண்மை, அவர்களின் பேச்சுரிமை மற்றும் நடமாடும் சுதந்திரத்தை உறுதி செய்வதன் ஊடாக பாதுகாப்புப் படையினர் தமது கடமைகளில் அர்பணிப்புடன் ஈடுபட்டுவருகின்றனர். இந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய தொடர் பொதுப் போராட்டங்களின் போது அது மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை 9 ஆம் திகதி கொழும்பு கோட்டையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் சில கவனக்குறைவான வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் ஏற்பட்டதைத் தவிர, சட்டம் ஒழுங்கை அமுல்படுத்தும் போதும் மற்றும் அதனை மீறல் தொடர்பான குறிப்பிடத்தக்க வன்முறைச் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை இங்கு குறிப்பிடலாம்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், நாட்டை விட்டு வெளியேறியதுடன் பொதுக் கட்டிடங்கள் மற்றும் அனைத்து சொத்துக்களையும் சேதப்படுத்தாமல் அதனை பாதுகாக்குமாறும் அனைத்து பிரச்சினைகளையும் அரசியலமைப்பு ரீதியாக தீர்க்குமாறும் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் மூன்று தடவைகளுக்கு மேல் போராட்டக்காரர்களிடம் கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 72 மணித்தியாலங்களில், பதில் ஜனாதிபதியாக கடமையாற்றும் பிரதமர், சபாநாயகர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது, நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சியினை விரைவுபடுத்துமாறு முப்படைத் தளபதிகளும் பொலிஸாரும் கோரிக்கை விடுத்துள்ள அதேவேளை, அமைதியான போராட்டங்களுக்கு முழு பலத்தையும் பயன்படுத்தாமல், போராட்டக்காரர்கள் பொது சொத்துக்களுக்கு சேதத்தினை ஏற்படுத்தாமலும் வன்முறைகளை ஏற்படுத்தாமல் இருக்கும் வரை குறைந்த பட்ச பலத்தை பயன்படுத்த வேண்டும் என்ற ஒருமித்த கருத்தையும் கொண்டிருந்தனர்.அந்த உறுதிமொழிகளைப் பொருட்படுத்தாமல், துரதிர்ஷ்டவசமாக, ஆர்ப்பாட்டகாரர்களின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர், அதன் பிரகடனப்படுத்தப்பட்ட 'அகிம்சை' அணுகு முறையிலிருந்து வேண்டுமென்றே விலகி, புதன்கிழமை (13) பிற்பகல் வரை தொடர்ந்து சட்டம் மற்றும் ஒழுங்கை மீறுவதை அவதானிக்க முடிந்ததுடன் பாராளுமன்ற வளாகத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் அங்கு கொண்டுவரப்பட்ட கனரக இயந்திரங்கள் மூலம் பொலிஸ் தடுப்புகளை அழித்து, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்ககூடிய ஒரே அரசியலமைப்பு நிறுவனமான பாராளுமன்ற வளாகத்தையும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தையும் முற்றுகையிட முயற்சித்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

புதன்கிழமை (13) இரவு 7.00 மணியளவில், இராணுவத்தினரின் தொடர்ச்சியான அமைதி கட்டுப்பாடுகளையும் மீறி, பாராளுமன்ற வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்ற அந்த கட்டுக்கடங்காத ஆர்ப்பாட்டக் கும்பல், தடிகள், இரும்பு கம்பிகள், கற்கள், தலைக்கவசங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி கடமையில் ஈடுபட்டிருந்த படையினரை ஆக்ரோஷமாக தாக்கி துன்புறுத்தியதுடன் இரண்டு T-56 ரக துப்பாக்கிகளை துப்பாக்கி ரவைகளுடன் பறித்து பல இராணுவ வீரர்களுக்கு காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். அவர்களில் இருவர் சுயநினைவை இழந்த நிலையில் அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு T-56 ரக துப்பாக்கிகளுடன் தப்பியோடிய அந்த ஆர்பாட்டகாரர்களை பற்றிய எச்சரிக்கை தற்போது பொலிஸாருக்கு தெரிவி்க்கப்பட்டுள்ளது.பதிலுக்கு, இராணுவத்தினர் குறைந்தபலத்தினை பிரயோகித்து வான் நோக்கி பல துப்பாக்கிச் சூடுகளை நடாத்தியதுடன் இராணுவ வீரர்களுக்கும் பொலிஸாருக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் மற்றவர்களையும் தூண்டிக்கொண்டிருந்த சில கட்டுக்கடங்காத வன்முறை பிரிவினரை தடுத்து நிறுத்தினர். எவ்வாறாயினும், பொலிஸாருடன் இராணுவத்தினர் இணைந்து, புதன்கிழமை (13) இரவு வரை குறைந்தபட்ச பலத்தினை பிரயோகித்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் குறித்த வன்முறை பிரிவினரை கலைத்து பாராளுமன்றத்திற்கான அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

வன்முறைச் செயல்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஆயுதப் படைகள் அல்லது பொதுச் சொத்துக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்தில் உள்ள போராட்டக்காரர்களை அனைத்து வகையான வன்முறைகளில் இருந்தும் உடனடியாக விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன் பொதுச் சொத்துக்கள், முக்கிய நிறுவனங்கள் மற்றும் மனித உயிர்களுக்கு பாதுகாப்பு தேவை என கருதினால், அவைகளை பாதுகாக்கும் பொருட்டு, ஆயுதப் படை உறுப்பினர்கள் தங்கள் பலத்தினை பிரயோகிக்க சட்டப்பூர்வமாக அங்கிகாரம் பெற்றுள்ளனர். (முடிகிறது).