ஆயுத படைகளில் மேலும் 50 பேருக்கான பயிற்சிகளை பெற்றுக்கொடுப்பதான இந்திய இராணுவ தளபதி ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு

13th October 2021

இலங்கை வருவை தந்திருக்கும் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே பிவிஎஸ்எம், ஏவிஎஸ்எம், எஸ்எம், விஎஸ்எம், ஏடிசி அவர்கள் இன்று (13) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது தனது இராணுவ சேவைக் காலத்தில் தான் இந்தியாவில் பெற்றுக்கொண்ட பயிற்சிகள் தொடர்பில் நினைவுகூர்ந்த ஜனாதிபதி இந்திய இராணுவ பயிற்சிகள் மூலம் இந்நாட்டு படையினருக்கு பெற்றுகொடுக்கப்படும் தலைமைத்துவ பயிற்சிகள் தொடர்பில் நன்றிகளையும் கூறிக்கொண்டார். அதேபோல் இந்தியாவின் பாதுகாப்பு படையினரால் பிராந்திய எல்லைகள், மலைப்பாங்குகளால் சூழக்கப்பட்ட மற்றும் தொலைதூர பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்துகொண்டார்.

ஆண்டுதோறும் இந்தியா கிட்டத்தட்ட 1000 இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்துவரும் நிலையில், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கள் மேலும் 50 அதிகாரிகளுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயிற்சியொன்றை வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதியிடம் இந்திய இராணுவ தளபதி உறுதியளித்தார்.

ஜெனரல் நரவனே அவர்கள் தான் இளம் அதிகாரியாக இந்திய அமைதிகாக்கும் படைகளின் கீழ் திருகோணமலையில் தான் பணியாற்றிய காலத்தில் பெற்றுக்கொண்ட அனுபவங்களை தற்போதைய விஜயத்தின் போது புதுப்பித்துக்கொள்ளகூடியதாக அமைந்திருந்ததாகவும் தெரிவித்தார். இதன் போது இந்திய இராணுவத்தினால் பிரிகேட் தளபதிகளுக்கான பயிற்சிகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பது தொடர்பிலும் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் விதம் தொடர்பாகவும் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய இராணுவத் தூதுக்குழுவிடம் இந்திய இராணுவத் தளபதியை சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்ததாகவும், இந்தியா இலங்கை அயல் நாடாகவும் நட்புநாடாகவும் விளங்குகிறது என்பதையும் நினைவுகூர்ந்தார்.

இராணுவ தலைமையக பயிற்சி கட்டளைகள் பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஜீவ் தாப்பர், இந்திய இராணுவ தளபதியின் செயலாளர் மேஜர் ஜெனரல் விக்ராந்த் நாயக், கேணல் மந்தீப் சிங் தில்லோன், ஜனாதிபதியின் செயலாளர் பேராசிரியர் பீ.பீ ஜயசுந்தர, ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் திரு லலித் வீரதுங்க மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.