ஜனாதிபதி மற்றும் பிரதமரால் “தீகவாபிய” தூபியின் மீள் கட்டுமானத்துக்கான நிதி திரட்டும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது
13th February 2021
கிழக்கிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க “தீகவாபிய” மகா சேயவை மீள் கட்டுமானம் செய்வதற்கான ஆரம்பகட்ட நிதித் திரட்டல் நிகழ்வு கொழும்பிலுள்ள “சம்போதி” விகாரையில் இன்று (12) நடைபெற்றது.
“தீகவாபிய” மகா சேயவை மீள் கட்டுமானம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மற்றும் பிரதமர், மகா சங்கத்தினர், ஜனாதிபதி ஆலோசகர்கள், ஆளுனர்கள், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், செயலாளர்கள், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, முப்படை அதிகாரிகள், பாதுகாப்பு துறை நிபுணர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், மீள் கட்டுமான திட்டத்துக்கான குழுவினர் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
மத வழிபாடுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்வில் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் இருந்த இலங்கையின் மிகவும் புனிதமான 16 பௌத்த வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான 'தீகவாபியா' விகாரையின் மீள் கட்டுமான பணிகள் தொடர்பான வீடியோ ஒன்று காட்சிப்படுத்தப்பட்ட பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
இந்த நிதித் திரட்டும் பணிகளின் முதற் கட்டமாக பௌத்தயா தொலைக்காட்சி அலைவரிசையின் தலைவர் வண.பொரலந்தே வஜீரங்கன தேரர், இலங்கை வங்கியின் பணிப்பாளர் திரு.காஞ்சன ரத்வத்த, பாதுக்காப்பு படைகளின் பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரால் மீள் கட்டுமான பணிகளை ஆரம்பித்தற்கான நன்கொடை பண காசோலைகள் சிலவும் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷவிடம் வழங்கி வைக்கப்பட்டன.
அதனையடுத்து தீகவாபியவின் மீள் கட்டுமான பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் (www.deegwapiya.lk) இணையத்தளம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன் போது தீகவாபிய விகாரையின் விகாராதிபதி மஹாஓய சோபித தேரரின் அழைப்பின் பேரில் அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரர் வண. வெடருவே தேரரால் அறிவுரைகளும் நிகழ்த்தப்பட்டதுடன் அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் வண.மெதகம தம்மானந்த தேரர்,பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் உட்பட மகா சங்கத்தினர் பலரும் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்வதற்கான பணிக்குழுவின் செயலாளர் திருமதி ஜீவந்தி சேனநாயக்க அவர்களால் நன்றி உரை நிகழ்த்தப்பட்டதுடன், மகா சங்கத்தினரின் பிரித் பாராயணங்களுடனான ஆசிர்வாத பூஜை இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகர் திரு லலித் வீரதுங்க, கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ சரத் வீரசேகர, தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ விதுரா விக்ரமநாயக்க, பிரதமரின் செயலாளர் திரு காமினி சேதர சேனரத், பௌத்த மத விவகார அமைச்சின் செயலாளர் திரு கபிலா குணவர்தன, பாதுகாப்புப் பதவிநிலை பிரதானியும், இராணுவத் தளபதியும் கொவிட்ட தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி ,பொலிஸ்மா அதிபர், , தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு அருண மானதுங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். |